Home » அரசியல் » செயல்படாதவருக்கு செயல் தலைவர் பதவி:

செயல்படாதவருக்கு செயல் தலைவர் பதவி:

மதுரை, ஜூலை 6:  திமுகவில் செயல்படாதவருக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினை அழகிரி தாக்கி பேசினார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டியில் தனது ஆதரவாளரின் இல்ல திருமண விழாவை, முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நான் திருமணத்தை நடத்தி வைக்க வருகிறேனா? அல்லது கட்சி மாநாட்டிற்கு வருகிறேனா? என்று தெரியாத அளவுக்கு கொடி தோரணங்களோடு என்னை வாழ்த்தி வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

இதை பார்க்கும்போது, பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது. தற்போது திமுகவில் உள்ளவர்கள் கட்சிக்கு உழைக்காதவர்கள். அவர்கள் அனைவரும் பதவிக்காகவே இருக்கிறார்கள். செயல்படாத ஒரு தலைவர் செயல் தலைவர் என்று சென்னையில் இருக்கிறார். ஆனால் செயல்படுகிற செயல் வீரர்கள் அதிகம் பேர் என்னிடம்தான் உள்ளனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே உள்ள நிலையில் திடீரென்று மு.க.அழகிரி, ஸ்டாலினை சூசகமாக பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவில் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. திருமங்கல் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவருக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கருணாநிதியை தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று அழகிரி கூறி வந்தார். 2014 மார்ச்சில் அவர் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

அண்மையில் மதுரை மாநகரில் 4 சட்டமன்ற தொகுதிகளை இணைத்து ஒரே மாவட்டமாக திமுக பொதுச்செயலாளராக அன்பழகன் அறிவித்தார்.

இந்த மாவட்டத்திற்கு 9 பேர் கொண்ட பொறுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். இந்த நடவடிக்கைக்குப்பிறகு அழகிரி முதல் முறையாக ஸ்டாலினை தாக்கி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*