Home » விளையாட்டு » உலக கால்பந்து திருவிழா நாளை தொடங்குகிறது

உலக கால்பந்து திருவிழா நாளை தொடங்குகிறது

மாஸ்கோ, ஜூன் 13: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நாளை (ஜூன் 14-ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. இனி, அடுத்த மாதம் 15-ம் தேதி வரை உலக கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். போட்டியை நடத்தும் ரஷ்யா உட்பட 32 அணிகள் இதில் மல்லுக்கட்ட உள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடக்க விழாவுக்காக மாஸ்கோ நகரின் லூசினிக்கி விளையாட்டுத் மைதானம் மின்னொளியில் மிளிர்கிறது. பிரபல இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். ராபி வில்லியம்ஸ், அய்டா கரிஃபுல்லினா, ரொனால்டோ ஆகியோர் பங்கேற்று இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர். மேலும் உள்ளூரைச் சேர்ந்த 500 கலைஞர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதில், நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ், இசை என பல்சுவை கலைகள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, அனைவரும் எதிர்பார்த்த பிபா கால்பந்து தொரின் முதல் போட்டியில், ரஷ்யா – சவுதி அரேபிய அணிகள் களம்காண்கின்றன. இதனை நேரில் பார்த்து பரவசம் அடைய, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மாஸ்கோவில் குவிந்தவண்ணம் உள்ளனர். மொத்தம் ரூ.87,000 கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள் ரஷ்யாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*