Home » Flash News » துப்பாக்கி சூடு சம்பவம் : விசாரணை துவக்கம்

துப்பாக்கி சூடு சம்பவம் : விசாரணை துவக்கம்

தூத்துக்குடி, ஜூன் 13:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரி பிரவிண்குமார் அபிநவ் இன்று விசாரணையை தொடங்கினார். முதல் கட்டமாக தூத்துக்குடி எஸ்.பி.அலுவலகத்தில் ஆவணங்களை சேர்க்கும் பணியில் அவரே ஈடுபட்டார்.

அடுத்த கட்டமாக பொது மக்களிடம் ரகசிய விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு ஒருநபர் நீதி விசாரணை கமிஷனை அமைத்து. இதன் நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு சென்று முதல்கட்ட விசாரணையை முடித்து விட்டு சென்னை திரும்பினார். கிரீன்வேஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் வரும் 30-ந் தேதி வரை துப்பாக்கிச்சூடு தொடர்பான தகவல்களை பொது மக்கள் வாக்குமூலமாக தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே துப்பாக்கிசூடு தொடர்பாக தூத்துக்குடி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக பிரவிண்குமார் அபினவ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரித்தார்.

3 கட்டங்களாக விசாரணை நடைபெற இருப்பதாகவும், அடுத்த கட்டமாக பொது மக்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை சேகரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட வெளி நபர்கள் மீதான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*