Home » Flash News » சிறு தொழில்களுக்கு ஊக்கம்:முதலமைச்சர்

சிறு தொழில்களுக்கு ஊக்கம்:முதலமைச்சர்

சென்னை, ஜூன் 13:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று அவை விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 1777 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான அடிப்படை வசதிகள் 96 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

இதேபோல விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாகுப்பம், பொல்லார் ஆகிய கிராமங்களில் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான அடிப்படை வசதிகள் 52 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இவற்றில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முதலீட்டு மானிய சலுகைக்கு இணையாக புதிய தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக மானியத் தொகை ரூ.33 லட்சமாக வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் 70.33 ஏக்கர் நிலப்பரப்பில் 87 கோடி ரூபாய் செலவில் 2-வது சிட்கோ தொழிற் பேட்டை நிறுவப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களின் புத்தாக்கத் திறனை அதிகரிக்க செய்யும் திட்டத்தின் கீழ் 400 தொழில் முனைவோருக்கு புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்ப சிக்கல்களை அறிவுசார் ஆலோசகருடன் கலந்து சரி செய்வதற்காகவும் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டொன்றுக்கு ரூ.20 கோடி செலவிடப்படும்.

வெளிநாட்டு ஒத்துழைப்பை பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் உள்ள குழந்தைள் இல்லத்திற்கு நவீன கட்டிடம் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும். நடப்பு ஆண்டில் 860 அங்கன் மைய கட்டிடங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுதுகளை நீக்கி சீர்ப்படுத்த ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மனவளர்ச்சி குன்றியோர், பார்வை திறன், செவித்திறன் குறைவுடோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூ.10,000லிருந்து ரூ.14,000மாக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கீழ் செயல்படும் 301 சிறப்பு பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11,948 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கான உணவூட்டும் மாயிம் 650லிருந்து 900-மாக உயர்த்தப்படும்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*