Home » Flash News » 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

கன்னியாகுமரி, ஜூன் 13:கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் துவங்கியது. இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதால் தாமிரபரணியாறு, பறளியாறு ஆகியவற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால் அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு நொடிக்கு ஆயிரத்து 238கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் நொடிக்கு 812 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 72அடியாக உயர்ந்தது. அணைக்கு நொடிக்கு ஆயிரத்து 838 கன அடி தண்ணீர் வருகிறது.

இதே அளவு தண்ணீர் வந்தால் 3 நாட்களில் அணை முழுக் கொள்ளளவை எட்டிவிடும். மாம்பழத்துறையாறு அணையில் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 54 அடியை எட்டியுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தாமிரபரணியாறு, பரளியாறு ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல பவானி, சிறுவாணி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் நீலகிரி மாவட்டம் அவலஞ்சியில் 90 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேல் பவானியில் 77 செ.மீட்டர் மழை பதிவானதால் வெள்ளம் பெருக்கெடுத்து பவானி சாகர் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 9 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. இதேபோல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு பகுதியிலும் மழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*