Home » சென்னை » பிஜேபிக்கு ஜெயலலிதா ஆதரவு வாபஸ் ஏன்: அமைச்சர்

பிஜேபிக்கு ஜெயலலிதா ஆதரவு வாபஸ் ஏன்: அமைச்சர்

சென்னை, ஜூன் 11: தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீரை வழங்க மறுத்ததால்தான் 1998 ஆம் ஆண்டு பிஜேபிக்கு அளித்த ஆதரவை மறைந்த முதல்வர் வாபஸ் பெற்றதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் தங்க நாற்கர திட்டத்தை திமுக மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்த போது மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த கால கட்டத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றார்.

முதல்வர்: ஐ.பெரியசாமி குறுப்பிட்டு பேசும் போது, தங்க நாற்கர திட்டம் மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த போது கொண்டு வந்தது என தவறான தகவலை கூறுகிறார். பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது அப்போது தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக தம்பி துரை இருந்த போது அந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அதை பின்பற்றியே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமார்: தங்க நாற்கர திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு வித்திட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

துரைமுருகன்: தங்க நாற்கரம் போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்த வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தது எதற்காக?அமைச்சர் ஜெயக்குமார்: 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் 5 செயல் திட்டங்களை
செயல்படுத்த வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்தார். அந்த செயல் திட்டத்தில் ஒன்றான 205 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனடியாக திறந்து விட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காத காரணத்தினால் சுயநலத்திற்காக ஆட்சியை கவிழ்க்காமல் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைக்காக, பொது நலன் கருதி வாபஸ் பெற்று தமிழக உரிமையை நிலைநாட்டினார்.
அமைச்சர் செங்கோட்டையன்: நாங்கள் வாபஸ் பெற்ற பிறகு திமுக, பிஜேபிக்கு ஆதரவு அளித்த பின்னர் மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மறைந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட வாஜ்பாய் டெல்லி திரும்புவதற்கு முன்பாகவே கூட்டணியை மாற்றியவர்கள் யார்? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் பெற முற்பட்ட போது சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்தி ஐ.பெரியசாமியை மீண்டும் பேச அழைத்தார்.

ஐ.பெரியசாமி எம்எல்ஏ: சென்னையில் சைதாப்பேட்டை,சின்னமலை,ஈக்காடு தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்கப்படும் என 2012 கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி: 2012-ம் ஆண்டு அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்க அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் தற்போது அந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் கைக்கு சென்றுள்ளதால் அங்கு எந்த பணியை மேற்கொண்டாலும் அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதில் சில பிரச்சனைகள் எழுவதால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஐ.பெரியசாமி: விஷன் 20-23-ல் சென்னை-தூத்துக்குடி, தூத்துக்குடி- கோவை, கோவை- சென்னை ஆகிய சாலைகள் 2017 ஆம் ஆண்டு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையும் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2016-ல் முடிவும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?முதல்வர் எடப்பாடி: தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் நிலம் எடுப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகளோ, மேம்பாலங்களோ அமைக்கும் போது அந்த பகுதியில் நிலம் கையப்படுத்துவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. முதல்கட்டமாக நிலத்தை கையகப்படுத்திய பின்னரே பணிகள் தொடங்குவதற்கு இந்த அரசு முடிவெடுத்துள்ளது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*