Home » Flash News » பொது மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

பொது மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 11:சென்னை – சேலம் இடையே ரூ.10,000 கோடி செலவில் அமைய இருக்கும் பசுமை விரைவுச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறியதாவது:

கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின்” கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம்277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் (59.1 கி.மீ.), திருவண்ணாமலையில் (123.9 கி.மீ.), கிருஷ்ணகிரியில் (2 கி.மீ.), தருமபுரியில் (56 கி.மீ.) மற்றும் சேலத்தில் (36.3 கி.மீ.) மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதுடன், இவ்வழிப்பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்எச் 179 என்றும், அரூர் முதல் சென்னை வரை என்எச் 179ஏ என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார்350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

வருங்காலத்தில் இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இரு ஙபறமும் 15 மீட்டர், அதாவது 30 மீட்டர் அகலத்திற்க கையகப்படுத்த வேண்டும்.

இதற்கென மொத்தம் சுமார் 2200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால், இந்த விரைவுச்சாலை அமைக்க சுமார் 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் இல்லை, வெறும் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். இப்புதிய சாலையினால், கிட்டதட்ட 300 ஹெக்டேர் நிலம்  குறைவாக கையகப்படுத்தப்பட வேண்டும்.

இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோமீட்டரில், 9.955 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமே, செங்கல்பட்டு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது. அதாவது, கையகப்படுத்த தேவையான 1900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே அடங்கும். இச்சாலை அமைக்க 70 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும். இது, வனப்பகுதியில் செல்லும்போது, அதன் அகலம் 45 முதல் 50 மீட்டர் ஆக குறைக்கப்படும்.
·தற்போது இருக்கின்ற இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும்போது கையகப்படுத்தப்படும் நிலங்களைவிட, இத்திட்டத்தின் மூலம் குறைவான நிலங்களே கையகப்படுத்தப்படும் என்பதாலும்,
· கையகப்படுத்தப்படும் நிலங்களிலும் சுமார் 400 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்கள் என்பதாலும்,
· மிக குறைவான எண்ணிக்கையிலேயே வீடுகள், தொழிற்சாலை கட்டடங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதாலும்,
· விபத்துக்களை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் திட்டம் என்பதாலும்,
· பெருகி வரும் வாகன போக்குவரத்திற்கு தேவையான கொள்ளளவை இத்திட்டம் நிவர்த்தி செய்யும் என்பதாலும்,
· நில உடைமைதாரர்களுக்கு போதுமான அளவு இழப்பீடு, புதிய நில எடுப்பு சட்டத்தின்படி கிடைக்கும் என்பதாலும்,

தற்போதுள்ள சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை விட, இந்த 8 வழி விரைவுச்சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் -குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும்.
எனவே, பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையினை அறிந்து, எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் அமைக்கும்பொழுது, கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் வனப்பகுதியிலும் மற்றும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி வனப்பகுதியிலும் மற்றும் திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு வனப்பகுதியிலும் சாலை அமைக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் திட்டமிடப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் செயல்படுத்தப்பட்டது என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*