Home » Flash News » கல்லூரி மாணவி புகாரில் திடீர் திருப்பம்

கல்லூரி மாணவி புகாரில் திடீர் திருப்பம்

சென்னை, மே 12:  ஷேர் ஆட்டோவில் சென்ற இன்ஜினியரிங் மாணவிக்கு, 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாணவி நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பல்லாவரத்திலுள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவருகிறார். இவர், கல்லூரி முடிந்ததும் பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு ரெயிலில் பயணம் செய்து, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் ஐயப்பன் தாங்கலில், தான் தங்கியுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

கடந்த 3 வருடங்களாக இந்த வழிதடங்களிலேயே அவர் பயணித்து வருகிறார். இதனிடையே, கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் கிண்டி வந்திறங்கிய மாணவி போரூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர், ஆண் பயணி ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில், கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 100 ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், துப்பு கிடைக்காத நிலையில் சந்தேகத்தின்பேரில் அந்த மாணவியிடம் உதவி கமிஷனர் பாண்டியன், கிண்டி இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையிலான பெண் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மாணவி அளித்த வாக்குமூலம், போலீசாருக்கே அதிர்ச்சியளித்துள்ளது. மாணவி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தினந்தோறும் ஷேர் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளவதன் விளைவாய், குறிப்பிட்ட சில டிரைவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்றைய தினம், ’சீக்கிரமா வந்துரு பர்த்டே பார்ட்டி இருக்குனு’ எனது நட்பில் உள்ள டிரைவர்கள் 2 பேர் சொல்வதை நம்பி அவர்களுடன் ஆட்டோவில் சென்றேன்.

போரூரை அடுத்த ஆள்நடமாட்டம் அல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, அவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். என்னை காப்பாற்றி கொள்வதற்காக நான் சத்தமிட்டேன். இதில் பயந்துபோய் என்னை மீண்டும் போரூருக்கே வந்திறக்கிவிட்டு அவர்கள் சென்றனர். இந்த உண்மை எனது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதற்காக, ஓடும் ஆட்டோவில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிக்கனலில் ஆட்டோ நின்றபோது அவர்களிடம் இருந்து நான் தப்பித்து வந்ததாகவும் போலீசிலும் வீட்டிலும் கூறி நம்பவைத்தேன்.

இவ்வாறு அந்த மாணவி கூறியுள்ளார். மாணவியின் செல்போன் அழைப்பை கண்காணித்த போது தான் அந்த மாணவியில் பேரில் தங்களுக்கு சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, போரூரை அடுத்த கோவூரை சேர்ந்த பவின் (வயது 21), ஜனார்த்தனன் (வயது 27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*