Home » சினிமா » ஜூன் 7-ல் ரஜினியின் காலா ரிலீஸ்

ஜூன் 7-ல் ரஜினியின் காலா ரிலீஸ்

சென்னை, ஏப்.21: ரஜினியின் காலா படத்தின் வெளியிட்டு தேதி 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கபாலி படத்திற்குப்பிறகு ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் சினிமா துறை போராட்டம் நடத்தியதால் புதுப்படங்ள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.  ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து புதுப்படங்கள் நேற்று முதல் ரிலீஸ் ஆனது.

ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருப்பதால் காலா படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து காலா படம் ஜூன் மாதம் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 7-ம் தேதி காலா வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஈஸ்வரிராவ், ஹீமா குரேஸி ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் நானா படேக்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒண்டர்பார் நிறுவனம்
சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில் சென்சார் அதிகாரிகள் கேட்டுக்கொண்ட பத்து வெட்டுகளுடன் யு/ஏ சான்று பெற்றுக்கொள்ள இயக்குனர் ரஞ்சித் தரப்பில் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஜூன் 7-ல் சுமார் நான்காயிரம் திரையரங்குகளில் காலா படத்தை வெளியிட தனுஷ் திட்டமிட்டு உள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*