Home » Flash News » நிர்மலா பரபரப்பு வாக்குமூலம்

நிர்மலா பரபரப்பு வாக்குமூலம்

விருதுநகர், ஏப்.21:  இரண்டாவது நாளாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் நிர்மாலாதேவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயர் அதிகாரிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என்று தெரிகிறது. மாணவிகளை தவறான செயலுக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான எஸ்பி ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் அதிகாரிகள் அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி வீடியா பதிவுகளை நேற்று இரவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதனையும் சோதனை செய்ய உள்ளனர். நிர்மலாதேவியிடம் இருந்து இரண்டு செல்போன்களை கைபற்றி அதில் உள்ள எண்களை ஆராய்ந்து வருகின்றனர். இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எண்கள் இருப்பதை கண்டு விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அடிக்கடி பேசப்பட்ட எண்களை எடுத்து அதன் அடிப்படையிலும் கேள்விகளை தயார் செய்து விசாரிக்க உள்ளனர். இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர் பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்துள்ளது.

இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றியும் தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.  தனி அதிகாரி சந்தானம் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். பல்கலை அதிகாரிகள் அளித்த தன்னிலை விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தனதுல விசாரணையின் அடிப்படையில் இதில் தொடர்புடைய பல்கலை அதிகாரிகள் பட்டியலை தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அது சிபிசிஐடி போலீசாரின்  விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் மதுரையில் இன்று நிருபர்களிடம் அதிகாரி சந்தானம் கூறுகையில், இன்று முதற்கட்ட விசாரணை முடிவடைகிறது. பேராசிரியர்களிடம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை முறையீடுகளை பெறுவேன். நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளேன். கிடைத்த பிறகு விசாரிப்பேன். அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமை தொடரும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*