Home » தமிழ்நாடு » விடைத்தாள் திருத்தும் பணி திடீர் பாதிப்பு

விடைத்தாள் திருத்தும் பணி திடீர் பாதிப்பு

சென்னை,ஏப்.16: பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியை சில மையங்களில் ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் நிலைமையை சீர்படுத்தி தாமதமின்றி தேர்வு முடிவை வெளியிடுவோம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதிய 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 74 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

இன்று காலை கடலூரிலும், கரூரிலும் சில ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கரூரில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள்களை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. கடலூரில் சுமார் 700 ஆசிரியர்கள் தேர்வு தாள் திருத்தும் மையத்தின் முன் கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். விருத்தாச்சலத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்படும். விடைத்தாள் திருத்தும் பணி மிக முக்கியமானது என்பதால் இதில் பாதிப்பு ஏற்படக்கூடாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். தேர்வு முடிவை உரிய நேரத்தில் வெளியிட நடவடிக்கை எடுப்போம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*