Home » குற்றம் » ‘பாம்’ சரவணனை மடக்கிய போலீஸ்

‘பாம்’ சரவணனை மடக்கிய போலீஸ்

சென்னை, ஏப்.16:ஒன்றரை வருடம் தலைமறைவாகி யிருந்த புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியை, திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்தபோது போலீசார் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர்.

புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (எ) பாம் சரவணன். இவர் மீது கே.கே. நகர், நீலாங்கரை உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் கொலை உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 8-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு வழக்கு, கே.கே.நகர் கதிரவன் கொலை வழக்கு, சங்கர ராமன் கொலையில் தொடர்பு ஆகியவை உள்ளடக்கம்.

இந்த வழக்குகள் சிலவற்றில் குற்றம் நிரூபணமாகி சிறையில் அடைக்கப்பட்ட பாம் சரவணன் மீது, 6 முறை குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. வெடிகுண்டு வீசுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பதால், அந்த பெயரே ரவுடிகள் வட்டாரத்தில் அவரது அடைமொழி யாக மாறி பாம் சரவணன் என்று அழைக்கப்பட்டு வந்தார். ரவுடிகள் அரங்கில் பாம் சரவணனின் எதிர்கோஷ்டியாக இருந்து வருகிறவர் ரவுடி நாகேந்திரன். இவரின் கூட் டாளிகளை பாம் சரவணன் கொலை செய்ய திட்டமிட்டு, தனது கூட்டாளிகளுடன் மிகப்பெரிய அளவிலான சதிதிட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே, பாம் சரவணனின் சதி திட்டத்தை முறியடித்து அவரை கைது செய்ய முடிவுசெய்தனர். இதனிடையே, பாம் சரவணன் தலைமறைவானார். இதனையடுத்து, பாம் சரவணனை தேடி கண்டுபிடித்து கைது செய்ய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இதன்பேரில், புளியந்தோப்பு டி.சி. ஷியாமளா தேவி, ஏ.சி. விஜய் ஆனந்த், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பத், ஆதர்ஸ், போலீசார்கள் ஜான்சன், நித்தியானந்தம், பூமிநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது.

இந்த நிலையில், பாம் சரவணன் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வீட்டிற்கு மாறுவேடத்தில் சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த ரவுடி பாம் சரவணனை சுற்றிவளைத்து, அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து பட்டாக்
கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர தப்பியோடிய பாம் சரவணனின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுமார் ஒன்றரை வருட தலைமறைவிற்கு பின் பாம் சரவணன், போலீசாரிடம் சிக்கியிருப்பது, குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*