Home » Flash News » சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் திண்டாட்டம்

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் திண்டாட்டம்

சென்னை, ஏப். 16:ஐபிஎல் கிரிக்கெட் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டு விட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் திண்டாடி வருகிறார்கள்.

சென்னை அணி விளையாடும் நாட்களில் இவர்கள் ஓட்டல்கள், விடுதிகள், தியேட்டர்களில் பெரிய திரைகளில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கிறார்கள். நேற்றிரவு மொஹாலியில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் லவன்ஸ் கிங்ஸ் அணியும் மோதிய ஆட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் விடுதிகள் மற்றும் பொது இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இந்த ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் இசிஆர் மட்டுமின்றி அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய ஓட்டல்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.

ரெஸ்டாரன்ட் மற்றும் பார்களில் ஒவ்வொரு நாளும் இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. இதனால் வணிகமும் அதிகரித்திருப்பதாக இதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள். இதனிடையே சென்னை நகரில் உள்ள சில சினிமா தியேட்டர்களும் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கான அனுமதியை கேட்டிருப்பதாக தெரிகிறது.

தற்போது திரைப்பட துறையில் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால் புதிய படங்கள் வெளிவரவில்லை. இதனால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இந்த நிலைமையை சமாளிக்க ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கான அனுமதி கேட்கப்பட்டு வருகிறது.

அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், காலை மற்றும் மதியம் திரைப்படங்களை ஒளிபரப்பி விட்டு மாலை மற்றும் இரவில் ஐபிஎல் ஆட்டங்களை திரையிட முடிவெடுத்திருக்கிறோம்.

இந்த ஆட்டங்களை பார்ப்பதற்கு சினிமா கட்டணத்திற்கு சமமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வசூலை ஈடுகட்ட ஐபிஎல் ஒளிபரப்பு உதவும் என்று சில தியேட்டர் அதிபர்கள் கூறுகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*