Home » விளையாட்டு » சொந்த மண்ணில் தோல்வி கண்ட கொல்கத்தா, மும்பை அணிகள்

சொந்த மண்ணில் தோல்வி கண்ட கொல்கத்தா, மும்பை அணிகள்

கொல்கத்தா / மும்பை, ஏப்.15: ஐபிஎல் போட்டியின் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் சொந்த மண்ணில் ஆடிய கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் தோல்வியை தழுவின.

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது.கிறிஸ் லின் 49 ரன்களும், தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், ஷகிப் அல் ஹசனும் பொறுப்புடன் ஆடினர். ஷகிப் அல் ஹசன் 27 ரன் எடுத்தார். சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதமடித்து அவுட்டானார். ஹூடாவும், யூசுப் பதானும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்
இறுதியில் ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஹூடா 5 ரன்னுடனும், யூசுப் பதான் 17 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, ஜான்சன் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தின. பில்லி ஸ்டேன்லேக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி பந்தில் டெல்லி அணி த்ரில் வெற்றிமுன்னதாக ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி 194/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தில்லி அணி 195/3 ரன்களை எடுத்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் டேர் டெவில்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி மாலை 4 மணிக்கு துவங்கியது.

முதலில் டாஸ் வென்ற டேர் டெவில்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ்-எவின் லெவிஸ் இணை களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி டேர் டெவில்ஸ் பந்து வீச்சை சிதறடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 102 ரன்களை சேர்த்திருந்தனர். மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது.

வெற்றிக்கு 195 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டேர் டெவில்ஸ் அணியின் ஜேசன் ராய், கேப்டன் கம்பீர் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கம்பீர் 15 ரன்களில் முஸ்தபிசூர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜேசன் அதிரடியாக ஆடினார். அவருடன் இணை சேர்ந்த ரிஷப் பந்து சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 47 ரன்களைக் குவித்து க்ருணால் பாண்டியா பந்தில் அவுட்டானார். பின்னர் ஜேசன் ராயுடன் இணைந்த ஷ்ரேயஸ் ஐயரும் அதிரடியாக ஆடினார். 18-வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை தில்லி அணி குவித்திருந்தது.

6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 47 பந்துகளில் அதிரடியாக ஆடி ஜேசன் ராய் 91 ரன்களைக் குவித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 27 ரன்களை குவித்தார்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ராய் ஒரு ரன்னை எடுத்தார். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை டெல்லி வென்றது. டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்டநாயகானாக தேர்வு செய்யப்பட்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*