w
Home » Flash News » சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது¦முதலமைச்சர்

சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது¦முதலமைச்சர்

சென்னை, மார்ச் 19:தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

இப்பிரச்சனையில் அதிமுக, திமுக இடையே இன்று சட்டசபையில் காரசாரம் விவாதம் நடைபெற்றது.தமிழகத்தில் காவல்துறை செயல்பாடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து திமுக, அதிமுக இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அமைச்சரின் பதிலுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரங்கராஜன் பேசுகையில், அரசு ஆண்டுக்கு ஆண்டு கடன் வாங்குவது அதிகரித்து கொண்டே போகிறது. ஒவ்வொரு தமிழர் தலையிலும் 45 ஆயிரம்ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது.

இந்த நிலையில் கடன் பெற்று ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம், நினைவிடம் கட்ட வேண்டுமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ஓ.பன்னீர்செல்வம்: சட்டமன்ற உறுப்பினர் ரங்கராஜன் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசுவதில் முழங்காலுக்கும், உச்சந்தலைக்கும் முடி போடுவது போல ஏதேதோ பேசி வருகிறார்.

தமிழகத்தில் 2016-2017 ஆண்டில் கடன் சுமை 2.17 லட்சமாக இருந்தது. உதய் மின்திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்தது. இதன் காரணமாகவேத்தான் 2 கோடியே 71 லட்சமாக உயர்ந்தது. 2017-2018 ஆம் ஆண்டு 3 கோடியே 12 லட்சம் ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் சுமை 2018-2019 ஆண்டுகளில் 3 கோடியே 56 லட்சம் ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உதய் மின் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியதன் காரணமாக மின் பகிர்மான கழகத்தின் 22,815 கோடி ரூபாய் கடன் சுமையை தமிழக அரசு ஏற்று கொண்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு செலவும் அதிகரித்ததன் காரணமாகவே கடன் சுமையும் அதிகரித்துள்ளது.இந்த கடன் சுமை கூட புள்ளி விவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சி தமிழகத்தில் தற்போது மேம்பட துவங்கி உள்ளதால் நிதி பற்றாக்குறையும் குறைந்து கடன்சுமையும் வருங்காலங்களில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும் மத்திய அரசு தெரிவித்துள்ள அளவீடுகளின் கீழ் தான் தமிழக அரசு கடன் சுமை உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக வேறு எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும் சரி, பிற மாநிலங்களும் சரி, மத்திய அரசும் சரி கடனை பெற்று தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆகவே கடன் பெறுவதை குறை கூறக்கூடாது. ரங்கராஜன் எம்எல்ஏ: புதுப்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதிகளில் காவலர்களுக்கு குடியிருப்பு கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி: எந்த ஒப்பந்தமும் விதிமுறைகளுக்கு உட்பட்டே தகுதி வாய்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகிறது. இதில் விதிமுறைகளுக்கு புறம்பாக யாருக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் அளிப்பது இல்லை. இங்கு அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சியினர் கூட அரசு ஒப்பந்தங்களை பெற்று பணிபுரிந்து வருகின்றனர். அதன் விவரங்கள் கூட எங்களிடம் உள்ளது.

ஆகவே தேவையில்லாதவற்றை பேசி அவையின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆளுங்கட்சி தரப்பினரின் உறவினர்கள் கூட தொழில் செய்து வருகின்றனர். அதை செய்ய கூடாது என யாரும் கூற முடியாது.

ரங்கராஜன் எம்எல்ஏ: தமிழகத்தில் சமீப காலமாக காவலர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. கே.3-காவல் நிலைய ஆய்வாளர், ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த காவலர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சரியாக இருப்பதாக தெரியவில்லை.

முதல்வர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசே தெரிவித்துள்ளது. மத்திய அரசின் குற்ற ஆவண பிரிவு அறிக்கை சமர்ப்பித்ததில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் பெண்கள் பாதுகாப்பு நகரத்தில் கோவை முதலிடத்திலும், சிறந்த பெருநகரமாக சென்னை மாநகரம் விளங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு தர நிர்ணய ஆய்வுகளை மேற்கொண்டதில் மிகச்சிறந்த 10 காவல் நிலையங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையமும், சென்னை அண்ணாநகர் காவல் நிலையமும் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் நாட்டில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் ஒட்டுமொத்தமாக 40 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது. தமிழகத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 1832 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரபிரதேசத்தில் கூட 1525 காவல் நிலையங்கள் உள்ளது. மேலும் தமிழகத்தில் காவலர் பணியிடங்கள் காலியாகும் போது உடனுக்குடன் பணியிடங்கள் நிரப்பப்பட்டு சட்டம் ஒழுங்கு சீராக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ரங்கராஜன் எம்எல்ஏ பேசும் போது குட்கா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார். அதற்கு சபாநாயகர் ஆட்சேபம் தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆதாரங்களுடன் ரங்கராஜன் பேச வேண்டும். இல்லை என்றால் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

பின்னர் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனை பேச சபாநாயகர் அனுமதித்ததை தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் உறுப்பினர்பேசி வருகிறார். இதற்கு ஆதாரத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை.

ஸ்டாலின் (திமுக); குட்கா விவகாரம் தொடர்பாகத்தான் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மற்றபடி காவல்துறை நடவடிக்கைகள் குறித்துஉறுப்பினர் பேசுவதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது என்றால் அவை மரபுகளுக்கு மீறிய செயலாகும். ஆகவே அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம், அவர் வாழ்ந்த வீடு நினைவிடம் அமைக்க நிதி உதவி ஒதுக்கியது சம்பந்தமாக உறுப்பினர் பேசி உள்ளார். இது எங்கள் தலைவரையும், தமிழகத்தின் தலைவராக இருந்தவரை கொச்சைப்படுத்தும் செயலாகும். நீங்கள் கூட உங்கள் ஆட்சி காலத்தில் செம்மொழி மாநாட்டை கடன் வாங்கிதானே நடத்தினீர்கள். அதே போன்று ஒப்பந்தபுள்ளி விவகாரத்தில் கூட முதலமைச்சர் மீது குற்றம் சாட்டி உள்ளீர்கள். 20 ஆண்டுகளாக ஒப்பந்தப்புள்ளி பணிகளை செய்தவர் தற்போது தான் முதல்வரின் சம்மந்தியாகி உள்ளார். சட்டம் ஒழுங்கு பற்றி உறுப்பினர் பேசுகிறார். உங்களது ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குப்புசாமி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உங்களது கட்சிக்காரர் சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் தொடர்ந்துஅவர்களை பலமுறை சமாதானப்படுத்த முயற்சித்த போதும் அவர்கள் இருக்கையில் அமர மறுத்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபாநாயகர் எழுந்து நின்று அனைவரையும் அமர செய்தார்.

அமைச்சர் தங்கமணி: அப்படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷை அப்போதைய திமுக அமைச்சர் கொடி கட்டிய காரில் சென்று சுரேஷை ஜெயிலில் பார்த்தாரா? இல்லையா?

அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றனர். அப்போது சபாநாயகர் அனைவரையும் சமாதானப்படுத்தி ஸ்டாலினை பேச அழைத்தார்.

மு.க.ஸ்டாலின் (திமுக): மின்துறை அமைச்சர் பொறுமையாக பேசக்கூடியவர் என்று நினைத்தேன். ஆனால் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். சேலம் காவல்துறை அதிகாரி கொலை வழக்கில் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர் குற்றவாளி இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போதிலும் அந்த வழக்கிலும் சுரேஷ் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது.

வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது சுரேஷை ஜெயிலில் சென்று சந்தித்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருந்த போது அமைச்சராக இருந்த நீங்கள் சென்று பார்த்தது சரியான நடவடிக்கையா?

அமைச்சர் தங்கமணி: நீங்கள் ஆதாரத்துடன் நாங்கள் சந்தித்ததை கூற முடியுமா? நாங்கள் யாரும் எங்கள் தலைவரை ஜெயிலில் சென்று சந்திக்கவில்லை. அவர் விடுதலையாகி வெளியே வரும்போது வரவேற்கத்தான் சென்றோம். ஜெயிலில் சென்று சந்தித்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா?இவ்வாறு சட்டசபையில் திமுக- அதிமுக இடையே காராசார விவாதம் நடைபெற்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*