Home » Flash News » தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயில்

தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயில்

சென்னை, மார்ச் 13: கடந்த இரண்டு ஆண்டுகால கட்டுமான பணி முடிவடைந்ததை அடுத்து, சின்னமலை – டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. ஏப்ரலில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல்-எழும்பூர் – நேரு பூங்கா இடையே பணிகள் நிறைவடைந்து, கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரெயில்
சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகால மெட்ரோ கட்டுமான பணி முடிவடைந்ததையடுத்து, சின்னமலை – சைதாப்பேட்டை இடையே 4 கி.மீ. தூரம் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

சைதாப்பேட்டை – ஏஜி டி.எம்.எஸ். மெட்ரோ வழித்தடத்தில் 3.3 கி.மீ. தூரத்திற்கு சுரங்க மெட்ரோ ரெயில் அமைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, டிஎம்எஸ், நந்தனம், தேனாம்பேட்டை ஆகிய 4 சுரங்க மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சுரங்க மெட்ரோ வழித்தடம் ஆனதால், ரெயில்பாதை, சிக்னல்கள், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில்: அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடக்கின்றன. பணிகள் முடிக்கப்பட்ட சின்னமலை – டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. மெட்ரோ ரெயிலை இயக்கி ஆய்வு செய்தோம்.

முதலில், 40 கி.மீ. வேகத்தில் இயக்கி ஆய்வு செய்தோம். பின்னர், கணிசமாக வேகத்தைக்கூட்டி 80 கி.மீ. வரை இயக்கி சோதித்து பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக, அடுத்த 2 மாதங்களுக்கு மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்துவோம். அதன்பிறகு, ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி ஒப்புதல் அளிப்பார்.

எனவே, அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இந்தத் தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜி-டி.எம்.எஸ். – மே தின பூங்கா இடையேயான 4.5 கி.மீ. வரையிலான மெட்ரோ பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*