Home » Flash News » பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மதுரை, மார்ச் 13: குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவருடன் சேர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் பாதிபேர் நிலைமைய கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது.

உயிருக்கு போராடிய சுமார் 30 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இன்று காலை மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த திவ்யா உயரிழந்தார்.

இத்துடன் உயரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த திவ்யா தனது 100-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக கணவர் விவேக் உடன் சென்றிருந்தார். இல்லத்தரசியாக இருந்த இவர் அண்மையில்தான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தார். துபாயில் பணியாற்றி வரும் இவரது கணவர் விடுமுறையில் வந்த போது மனைவியுடன் 100-வது திருமண நாளை கொண்டாட சென்றுள்ளார். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது அவர்கள் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சி, சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனிடையே தீவிபத்தில் படு காயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ. ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை ஆஸ்பத்திரிகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களை காப்பாற்ற மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீக்காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி நேற்று இரவு நேரில் பார்த்தார்.

அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார். இந்த நிலையில், தீக்காயம டைந்தோரில் 50% பேர் கவலைக் கிடமாக உள்ளனர், அவர்கள் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளனர் என்று மதுரையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*