Home » Flash News » சட்டசபை சிறப்பு கூட்டம்

சட்டசபை சிறப்பு கூட்டம்

சென்னை, மார்ச் 13:  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதால், உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வருகிற 16-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைச்ச மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
காவிரி பிரச்சனையில் கடந்த மாதம் 16-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காவிரி நீர் யாருக்கும் சொந்தமில்லை என்றும் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீர் அளவு குறித்தும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு தாமதம் காட்டியது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கடந்த 22-ந் தேதி அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று அந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனிடையே 4 மாநில அதிகாரிகளின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்படவில்லை என புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கர்நாடக மாநில அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொலைபேசியிலும் இந்த கோரிக்கையை முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 15-ந் தேதி கூடுகிறது. அப்போது தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆகவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை என்றும், 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் வருகிற 16-ந் தேதி சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை நடத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் அந்த சிறப்பு கூட்டத்தில் கொண்டு வரப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. பின்னர் அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*