Home » Flash News » காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம் : முதல்வர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம் : முதல்வர்

கோவை, மார்ச் 11:காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், இதற்காக டெல்லியில் எம்பிக்கள் தொடர்ந்து போராடி வருவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் அளித்த பேட்டியில் கூறினார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் இன்னும் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

மூன்று வாரம் கடந்து விட்ட நிலையில் கடந்த 9-ந் தேதி இது தொடர்பாக 4 மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்நாடக அரசின் தலைமை செயலாளர் இறுதி தீர்ப்பில் மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் ஸ்கீம் என்ற சொல் மேலாண்மை வாரியத்தை குறிக்காது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிறகு நேற்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மேலாண்மை வாரியத்தைதான் ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு நீதி கிடைக்க செய்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி பட தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி வழக்கில் தமிழகத்தின் வாதங்கள் முழுமையாக முன்வைக்கப்பட்டன. அரசியலுக் காக தமிழகம் வாதங்களை முன்வைக்கவில்லை என வைகோ பேசுகிறார். காவிரி வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள், 13 நாட்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அரசியலுக்காகவே பேசப்படுகிறது. உறுப்பினர்களாக இருந்துகொண்டு வலியுறுத்தும்பொழுதே இதுவரை எதுவும் நடக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து வலியுறுத்துவோம். 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ளது.ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டேன் என ராகுல் காந்தி கூறிய நிலையில், இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டத்தில் இடமிருந்தால்தான் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*