Home » Flash News » மகளிர்தின விழாவில் கமல் பரபரப்பு பேச்சு

மகளிர்தின விழாவில் கமல் பரபரப்பு பேச்சு

சென்னை, மார்ச் 8:மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வந்தேன். மாணவர்கள் அரசியல்வாதியாக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அரசியலை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை காளவாக்கம் ஒ.எம்.ஆர் சாலையில் உள்ள எஸ்எஸ்என் கல்லூரியில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கமல் பேசியதாவது:- மகளிர் தினத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திடீரென அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

மாணவர்கள் அரசியல் வாதியாக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அரசியலை கண்காணிக்க வேண்டும். நீங்கள் கண்காணிக்க மறுத்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் தலைமுறை அதை செய்ய தவறிவிட்டது.

நீங்கள் இப்போது கண்காணித்தால் உங்கள் தலைமுறை சிறப்பாக அமையும். பெண்கள் இன்று மட்டுமல்ல 364 நாட்களும் போற்றப்படவேண்டியவர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஒரு நடிகனாக எனக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஆனால் உங்களுக்கு சேவை செய்த பிறகே நான் மடியவேண்டும் என்று விரும்புகிறேன். இதை சொல்லும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. உங்களை நாளைய தலைமுறை லீடராக பார்க்கிறேன். உங்களை பின்தொடர தயாராக உள்ளேன். இவ்வாறு கமல் பேசினார்.

அதன் பின்னர் கமல்ஹாசனிடம் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: மாணவர்கள் அரசியலுக்கு வரலாமா?
பதில்: நீங்கள் இல்லாமல் அது சாத்தியமில்லை.

கே: சாதாரண மக்களால் எப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்.
ப: உங்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். ஓட்டு போட வேண்டும். அது யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தைரியமாக உங்கள் ஓட்டை போட வேண்டும். அதை செய்யாததன் விளைவுதான் இன்று நாம் இப்படி உள்ளோம்.

கே: மய்யம் என்றால் என்ன?
ப: மய்யம் என்றால் நீங்கள். உங்களுக்குள் உள்ளது தான் மய்யம். அது ஒரு நீதிபதி மாதிரி. அது சுலபமல்ல. நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும் ஒரு புள்ளியாகும். எது சரி, எது தவறு என்று நீங்களே முடிவு எடுக்கலாம்.

கே: பெண்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
ப: நீங்கள் எந்த நாட்டில் நின்று கொண்டு பேசுகிறீர்கள். பெண்களுக்கு ஓட்டு உரிமை இருக்கா? இல்லையா? என்று விவாதித்துக்கொண்டு இருந்த போது இந்தியாவை ஆண்டது ஒரு பெண்

பிரதமர். எனவே பெண்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*