Home » Flash News » கர்நாடகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு

கர்நாடகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு

பெங்களூரு, பிப்.17: காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த நீரின் அளவைவிட 14.75 டிஎம்சி குறைவாக வழங்க உத்தரவிட்டது.
அரசியலில் ஈடுபடத் தொடங்கி உள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த தீர்ப்பு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார். தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினிகாந்த், காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதால் அவருக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பெங்களூர் அருகே உள்ள சன்னப்பட்னா நகரில் கன்னட அமைப்பினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கர்நாடகத்தில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் தமிழக நகரங் களில் இருந்து நேற்று மாலை வரை ஓடிய தமிழக பஸ்கள் இரவு நேரத்தில் கர்நாடகத்திற்கு செல்லவில்லை. இரு மாநிலங்கள் இடையே போக்கு வரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

சத்தியமங்கலம், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் சரியான பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கோயம்பேட்டில் இருந்து ஒருசில பஸ்களே போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடகத்திற்கு செல்கிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*