Home » Flash News » ஐ.டி.பெண் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

ஐ.டி.பெண் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

சென்னை, பிப்.17: பெரும்பாக்கத்தில் ஐ.டி. பெண் ஊழியர் லாவண்யா தாக்கப்பட்டு நகை பறிப்பு செய்த வழக்கில் செம்மஞ்சேரியை சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களிடமிருந்து செல்போன், செயின், லேப்டாப், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர்
சாரங்கன் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர், லாவண்யா ஜன்கத். நாவலூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் இன்ஜியராக பணியில் உள்ள இவர், பள்ளிக்கரணையை அடுத்த தாழம்பூரில் அறை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இவர் பணிபுரியும் நிறுவனம், ஈக்காட்டுதாங்கலில் உள்ள தங்களது மற்றொரு நிறுவனத்திற்கு, லாவண்யாவை தற்காலிகமாக இடமாற்றம் செய்திருந்தது. இதனிடையே, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி வழக்கம்போல் பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பி கொண்டிருந்தபோது, அரசன் கழனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த லாவண்யாவை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சிலர், லாவண்யாவை முட்புதருக்குள் தூக்கி சென்று இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு நகை, ஐ-போன் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் கொள்ளையடித்து தப்பியோடினர்.

தாக்குதலில் சுயநினைவு இழந்த லாவண்யாவை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது. லாவண்யாவை சந்தித்து வாக்குமூலம் பெறசென்ற போலீசாரிடம், எனக்கு ஏற்பட்ட இத்தகைய நிலை, வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. எனவே, குற்றவாளிகளை விரைந்து பிடித்து உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று லாவண்யா தெரிவித்துள்ளார். முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதால் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என போலீசாரும் லாவண்யாவிடம் உறுதியளித்தனர். இது குறித்து ஏ.சி. கோவிந்தராஜ், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் மற்றும் லாவண்யா தெரிவித்த தகவலின்பேரில் விசாரணை நடத்திவந்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயக மூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான மூன்று பேரும் 19-ல் இருந்து 20 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் சாரங்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாப்வேர் துறையில் நிபுணரான லாவண்யா, பணி நிமித்தமான மேல் ஆலோசனை வழங்க கிண்டி ஒலிம்பியா டெக்பார்க்கிற்கு சென்றுவிட்டு தாழம்பூரிலுள்ள அவரது வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த நபர்கள் அவரை தாக்கிவிட்டு லாவண்யாவிடமிருந்து செயின், ப்ரேஸ்லெட், லேப்டாப், 2 செல்போன்கள், பைக் ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பியோடியுள்ளனர்.

இந்த தாக்குதலினால், லாவண்யாவின் முகம், நெற்றி, கைகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குபின் லாவண்யாவின் உடல்நிலை தேறிவருகிறது. இதனிடையே, வழிப்பறி செய்யப்பட்ட லாவண்யாவின் செல்போன், லேப்டாப், செயின், பைக் மற்றும் அவர்கள் பயன்படுத்தி அரிவாளை பறிமுதல் செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழிப்பறி, கொலை முயற்சி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. நகை, பணம் போன்ற ஆதாயத்திற்காக வேண்டியே லாவண்யா மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*