Home » தலையங்கம் » ரேணுகாவின் அர்த்தமற்ற சிரிப்பு

ரேணுகாவின் அர்த்தமற்ற சிரிப்பு

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆற்றிய உரை குறித்து காங்கிரசார் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். சுமார் 3 மணி நேரம் பிரதமர் பேசிய போது காங்கிரஸ் கட்சியின் கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்டினார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை எடுத்துரைத்தார். ஆதார் அடையாள அட்டை குறித்து அவர் பேசியபோது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான கருத்துரு உருவாக்கப்பட்டு விட்டது என்றார். உடனே காங்கிரசின் மூத்த உறுப்பினர் ரேணுகாசவுத்ரி பிரதமரை கேலி செய்வது போல் பலமாக சிரித்தார். அவர் நடந்து கொண்ட விதத்தை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்துள்ளார்.

உறுப்பினருக்கு மன ரீதியில் பிரச்சனை என்றால் அதற்கான மருத்துவரை அணுகலாம் என்று அவர் கூறியதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே பிரதமர் மோடி குறுக்கிட்டு, ரேணுகா சவுத்ரி பற்றி எதுவும் பேசாதீர்கள். ராமாயணத் தொடரில் கேட்ட பலத்த சிரிப்பொலியை மீண்டும் கேட்டு இருக்கிறோம் என்று கூறினார். இது காங்கிரசாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. ‘சூர்ப்பநகையுடன் ரேணுகாவை பிரதமர் ஒப்பிட்டு விட்டார். இது பெண்களை அவமதித்ததற்கு சமம்.பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவதும், கடந்த ஆட்சியின் போது நடைபெற்ற தவறுகளையும் சுட்டிக் காட்டுவது வழக்கமானது தான். பிரதமரின் உரையில் தவறு இருக்குமானால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். சத்தம் போட்டு சிரிப்பது என்பது அவை நாகரிகமாகாது.

ஆந்திராவைச் சேர்ந்த ரேணுகாசவுத்ரி கடந்த காலத்தில் பல முறை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். 2011ல் ஆண்களின் ஆடைகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கண்டனத்துக்குள்ளானார். 2015ல் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி தலித் ஒருவரிடம் ரூ. 1.15 கோடி லஞ்சம் வாங்கியதாக இவர் மீது ஆந்திர போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. சுகாதார அமைச்சராக இருந்த போது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் கொண்டு வந்து விவாதத்தில் ஈடுபட்ட போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு கண்டனத்துக்குள்ளானார். இப்போது கேலி செய்திருப்பது பிரதமரை அல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*