Home » குற்றம் » ரவுடிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரி உடந்தை

ரவுடிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரி உடந்தை

சென்னை,பிப்.8: சென்னையில் நேற்று பிடிபட்ட ரவுடிகளுக்கு கடந்த காலங்களில் உடந்தையாக இருந்த ஓய்வு பெற்ற காவல்துறையின் உயர் அதிகாரி பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎஸ் அதிகாரியான இவர் மாதந்தோறும் பல கோடி மாமுல் பெற்று கொண்டு ரவுடிகளை கைது செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தப்பி ஓடிய தாதா பினு உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல தாதா பினுவின் பிறந்த நாள் விழா, பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் அந்த இடத்தில் ஒன்றுகூடியிருந்தனர். இது குறித்த தகவலறிந்த காவல் ஆய்வாளர் சிவக்குமார், அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையங்களில் உள்ள போலீசார்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

போலீஸ் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்து, ரகசியமாக கண்காணித்தனர். ஒரே இடத்தில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்டறிந்த போலீசார், பண்ணை வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.

போலீசாரின் அதிரடி ஆபரேஷனை சற்றும் எதிர்பாராத ரவுடிகள் நாலா புறமும் தெறித்து ஓடினர். இருப்பினும், அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து, வீச்சரிவாள், அரிவாள், கத்தி உட்பட ஆயுதங்களையும், 38 பைக்குகள் மற்றும் 8 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விலையுயர்ந்த செல்போன்கள் உட்பட 60 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் நடத்திய இந்த அதிரடி வேட்டையில் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளிகளும், தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளும் சிக்கினர். தப்பியோடிய 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பினு, கனகு, விக்னேஷ் ஆகிய 3 ரவுடிகள் சேலத்தில் தலைமறைவாகியுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 76 ரவுடிகள் மீதும் மாங்காடு, எஸ்.ஆர்.எம்.சி., வடபழனி, சூளைமேடு, அசோக் நகர், தி.நகர், அண்ணா நகர் மற்றும் அரும்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 23 ரவுடிகள் என சம்பந்தபட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் எடுத்து 72 ரவுடிகளையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இவர்களில் 20 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 6 மாதத்துக்கு எந்த தப்பும் செய்ய மாட்டேன் என உறுதியளித்தன் அடிப்படையில் 3 ரவுடிகளும், ஒருவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

கைப்பற்றப்பட்ட 60 செல்போன்களுக்கு வந்துள்ள அழைப்புகளை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்து பட்டியல் தயாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள செல்போன் நம்பர்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். அவைகளில் 88 சிம் கார்டுகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரவுடிகளின் செல்போன்களில் பதிவான தகவலின்படி, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டதாக தெரியவந்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட 75 ரவுடிகளும் இத்தனை நாளாய் போலீசின் பிடியில் சிக்காமல் இருந்ததற்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக மாதந்தோறும் பலகோடி ரூபாய் மாமூல் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியின் பெயரை ரகசியமாய் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பத்திரிக்கையாளர் (ப்ரெஸ்) ஸ்டிக்கர் இடம்பெற்றிருப்பதால் வாகனங்களை கண்காணித்து அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை செயல்பட்டுவருகிறது. தாதா பினுவின் பிறந்த நாள் விழா கொண்டாட இடம் கொடுத்த வேலு என்பவரது லாரி ஷெட், நீர்நிலை இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது என்பதால், அந்த இடத்தை நேற்று காலை ஜேசிபி எந்திரம் கொண்டு போலீசார் இடித்து தரைமட்டமாக்கினர். தலைமறைவாகியுள்ள லாரி ஷெட் உரிமையாளர் வேலுவையும் போலீசார் தேடிவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*