Home » சென்னை » விரைவில் களையெடுப்பு பணி தொடங்கும் : ஸ்டாலின்

விரைவில் களையெடுப்பு பணி தொடங்கும் : ஸ்டாலின்

சென்னை, பிப்.8: திமுகவில் ஸ்டாலின் நடத்தி வரும் ஆய்வு பணி முடிவடைந்தவுடன் களையெடுப்பு தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நடவடிக்கையில் மாவட்ட செயலாளர்களும் தப்ப முடியாது என்று கட்சி வட்டாரம் கூறுகிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து தோல்வி அடைந்த பிறகு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை 8 மணி முதல் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் இறுதியில் திமுக மண்டல மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முன் கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஆய்வு கூட்டம் முடிந்தவுடனேயே களையெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களை சந்திப்பது இல்லை என்றும் பெருமளவில் சொத்து
சேர்த்திருப்பது குறித்தும் கடிதங்கள் எழுதி போட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேற்கு பகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் இந்த நடவடிக்கைக்கு தப்ப மாட்டார்கள் என்று தெரிகிறது. ஈரோட்டில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டுக்கு முன்பே இந்த நடவடிக்கை இருக்கும் என்றும் 12 மாவட்ட செயலாளர்கள் வரை மாற்றப்படுவார்கள் என்றும் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*