சென்னை, பிப். 8: நடிகர் விஷாலை நடிகர் சங்கத்தை விட்டும் தமிழ் நாட்டை விட்டும் விரட்டப்போவதாக ஜே.கே. ரித்தீஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நிகழ்ந்த அரசியல் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து, சிவா மனசில புஷ்பா என்ற திரைப்படத்தை வராகி என்பவர் இயக்கி உள்ளார்.இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் எம்.பி ஜே.கே ரித்தீஷ் , நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலை நடிகர் சங்கத்தை விட்டே துரத்தப் போவதாகக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், விஷாலை தமிழ் நாட்டை விட்டே விரட்ட போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றிப் பெற்றதற்கு ஜேகே ரித்தீஷ் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். நாடக நடிகர்களின் வாக்குகள் பெருமளவு கிடைப்பதற்கு அவர் தீவிர வேலைப் பார்த்தார்.
ஆனால் விஷால் அணி ஜெயித்து வந்த பிறகு, ஜேகே ரித்தீஷுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது.
இப்போது அது தீவிரமாகிவிட்டது. விஷாலை இப்போது கடுமையாக எதிர்க்கும் முதல் நபராகிவிட்டார் ஜேகே ரித்தீஷ்.
இந்த ஆண்டு மே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் விஷாலுக்கு எதிராக ஜேகே ரித்தீஷ் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். நேற்று நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் ஜேகே ரித்தீஷ் இவ்வாறு பேசியுள்ளார்.