Home » தமிழ்நாடு » மருத்துவமனைகளில் புற்றுநோயை தடுக்க விரைவில் பெட் ஸ்கேன்: விஜயபாஸ்கர்

மருத்துவமனைகளில் புற்றுநோயை தடுக்க விரைவில் பெட் ஸ்கேன்: விஜயபாஸ்கர்

சென்னை,பிப்.8: புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுக்கும் வகையில் மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் பெட் ஸ்கேன் என்ற புதிய மருத்துவ சாதனம் விரைவில் அமைக்கப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இன்று சென்னை அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புற்றுநோய்தினத்தை முன்னிட்டு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பலூன்களை பறக்க விட்டு, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, 4-வது தளத்தில் உள்ள புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வார்டில் இன்னிசை சிகிச்சை நடத்தியதை பார்வையிட்டு, புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்துணவு பெட்டகங்களை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை ஆரம்ப நிலையில் கண்டறியவும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மற்றும் புற்று நோயில் இருந்த குணமடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்பதை பற்றியும் வலியுறுத்த உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தின் நோக்கம் எதிர்வரும் 2020க்குள் புற்றுநோயின் தாக்கத்தையும் அதன் இறப்பு விகிதத்தை குறைப்பதும் ஆகும். 2016-18ஆம் ஆண்டிற்கான உலக புற்றுநோய் தினத்திற்கான கருப்பொருள் : நம்மால் முடியும், என்னால் முடியும்.மக்கள் தொகை அல்லது சமூகம் சார்ந்த தொற்றா நோய்கள் கண்டறியும் திட்டம் 2017-18-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மற்றும் கோவை மாநகரங்களில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,203 துணை சுகாதார நிலையங்களில் 14.66 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மாநில புற்றுநோய் கவனிப்பு கொள்கை விரைவில் வகுக்கப்படவுள்ளது. அடையார் புற்றுநோய் நிலையத்துடன் இணைந்து மாநில அரசு புற்றுநோய் பதிவேடு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது புற்றுநோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும். சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பெட் ஸ்கேன் விரைவில் நிறுவப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் (பொ.) மரு. நாராயண பாபு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*