கேப்டவுன், பிப்.8: தற்போது தான் விளையாட்டில் காட்டும் தீவிரம் தனது 35 வயதிலும் இருப்பேன் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி தென்னாப்ரிக்காவில் முதல்முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் விராத் கோலி 160 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற பின் பேசிய அவர், இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வீரர் விக்கெட்டை இழக்காமல் ஆடுகளத்தில் இருந்தால் ரன் சேர்க்க முடியும். கேப்டனாக களத்தில் நின்று விளையாடுவது மகிழ்ச்சியான ஒன்று. அடுத்த போட்டி மிக முக்கியமானது. இந்த தொடரை நழுவவிட கூடாது. அடுத்த போட்டியில் வெற்றி பெற அந்த அணி பல முயற்சிகள் எடுக்கும். அவற்றை முறியடித்து வெல்ல வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டை எப்போதும் தீவிரமாக எதிர்கொள்வேன். அந்த தீவிரம்தான் என்னை செயல்பட வைக்கிறது. எனது 35 வயதிலும் இதே போல தான் விளையாட விரும்புகிறேன். அந்த தீவிரம் போய்விட கூடாது என்றார்.
ரன் மிஷினான கேப்டன்
நேற்றைய போட்டியில் கேப்டன் விராத் கோலி சதம் அடித்து கங்குலி சாதனையை முறியடித்தார்.
கேப்டவுனில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் விராத் கோலி 159 பந்துகளில் 12 பவுண்ட்ரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 160 ரன்கள் அடித்தார். இது அவரது 34வது சதமாகும். இதன் மூலம் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளியுள்ளார். கங்குலி 11 சதங்கள் அடித்திருந்தார். கோலிக்கு இது கேப்டனாக 12வது சதம்.
கேப்டவுன் மைதானத்தில் முதல் முறையாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் விராத் கோலி இந்த தொடரில் 318 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக அந்த அணியில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.