Home » இந்தியா » தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்: சோனியா

தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்: சோனியா

சென்னை,பிப்.8: மக்களவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்பதால் அதை சந்திக்க தயாராக இருங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோனியா அழைப்பு விடுத்தார். டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் சோனியா உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி இருக்கிறேன். இப்போது தலைமை பொறுப்பு ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அவர் மகனாக இருந்த போதிலும் கட்சியின் தலைவர் என்ற முறையில் எனக்கும் அவர் தான் தலைவர். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நீங்களும் அவருக்கு முழு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டு கூடுதல் அதிகாரங்களுடன் செயல்படுகிறது. இது அதிகார அமைப்பை சட்டரீதியில் பலவீனமாக்கி உள்ளது. இந்த ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

நாடாளுமன்ற அமைப்பு, நீதிமன்றம், ஊடகம் போன்ற துறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் தூண்டிவிடப்பட்டிருக்கிறது. தலித்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

அண்மையில் ராஜஸ்தான் இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். குஜராத் தேர்தலிலும் நல்ல முறையில் முடிவுகள் கிடைத்தது. அரசியல் காற்று மாற்றப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
மோடி அரசிடம் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. பழைய திட்டங்களையே புதிது போல் காட்டுகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்தலை சந்திப்பதற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*