Home » Flash News » பூந்தமல்லியில் 76 ரவுடிகள் சுற்றிவளைப்பு

பூந்தமல்லியில் 76 ரவுடிகள் சுற்றிவளைப்பு

சென்னை, பிப்.7:சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்தபோது போலீசார் துப்பாக்கி முனையில் 76 ரவுடிகளை சுற்றி வளைத்தனர்.

50 பேர் தப்பியோடிவிட்டனர். 38 இரு சக்கர வாகனங்களும்,8 கார்களும், 35 பயங்கர ஆயுதங்களும் சிக்கின. நடிகர் விஜய் நடித்து வெளியான ‘திருப்பாச்சி’ பட காட்சியைப்போல ஒரே நேரத்தில் ரவுடிகள் கூடியிருந்த போது போலீசார் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தப்பியோடியவர்களை பிடிப்ப தற்காக 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாம்பரத்தில் இருந்து அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் இருந்த நபர்கள், பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் (லாரி ஷேட்டில்) நடக்கும் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பினு என்பவர் தேடப்படும் குற்றவாளி என்பதையும், அவர்மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள்
நிலுவையில் இருப்பதையும் அறிந்த காவல் ஆய்வாளர் சிவக்குமார், இதுகுறித்து அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையங்களில் உள்ள போலீசார்கள் உஷார்படுத்தப்பட்டனர். போலீஸ் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்து, ரகசியமாக கண்காணித்தனர். ஒரே இடத்தில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்டறிந்த போலீசார், பண்ணை வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். போலீசாரின் அதிரடி வரவு அங்கு கூடியிருந்த ரவுடிகளுக்கு பேரிடியாக அதிர்ச்சியளிக்க, அடுத்த கணத்தில் அனைவரும் தெறித்து ஓடினர். இருப்பினும் 76 ரவுடிகளை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.

பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உட்பட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவர்கள் வந்த 8 கார்கள், 38 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய இந்த வேட்டையில் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளிகளும், தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளும் சிக்கியுள்ளனர். சிக்கிய ரவுடிகளிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வேறு ஏதேனும் மிகப்பெரிய சதி திட்ட நோக்கத்துடன் ஒன்றுகூடியிருந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய பினு உள்பட 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, பினுவின் பிறந்தநாள் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. ரவுடிகள் புடைச்சூழ சாதாரண கத்தி அல்லாது வீச்சரிவாளை பயன்படுத்தி பினு கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வேலு என்பவருக்கு சொந்தமான லாரி ஷேட், பண்ணை வீடாக மறுவடிவம் பெற்றது எவ்வாறு என்பதை அறிவதற்காக, வேலுவை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையம், ஆவடி காவல்நிலையம் உட்பட 4 காவல்நிலையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றவழக்குகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், சம்பந்தபட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்படுவர். இவர்களில், சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம் உள்பட வெளியூரை சேர்ந்த ரவுடிகளும் அடங்குவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த தகவல்கள் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சி திரைப்பட பாணியில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*