சென்னை,பிப்.6: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்துக்கு உள்ளான மண்டபத்தை தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். தீ விபத்து நடந்தது பற்றி விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து குறித்து மதுரை மாநகர போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தேசிய பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் இன்று காலை கோயிலுக்கு வந்தனர்.தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வசுந்தராயன் மண்டபத்தில் சேதமடைந்த கல்தூண்கள், இடிந்த மேற்கூரை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர்.
விபத்து நடந்த போது அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் தடயங்களையும் சேகரித்தனர். தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதல்கட்ட விசாரணை நடத்திய மதுரை போலீஸ் கமிஷனரையும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று காலை சந்தித்து பேசினர். சேகரிக்கப்பட்டதடயங்கள் தொடர்பாக போலீசார் கேட்டறிந்தனர்.