Home » இந்தியா » தேர்வில் தோல்வி காரணமா? சென்னை மாணவர் ஐதராபாத்தில் தற்கொலை

தேர்வில் தோல்வி காரணமா? சென்னை மாணவர் ஐதராபாத்தில் தற்கொலை

ஐதராபாத், பிப்.6: ஐதராபாத்தில் பொறியியல் பட்டப்படிப்பு பயின்றுவந்த  சென்னையை சேர்ந்த மாணவர், நேற்று தான் தங்கும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் ராகவ் சாந்தாராம் (வயது 21). இவர், ஐதராபாத்தில் அமைந்துள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தில் 3-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துவந்தார். கல்லூரியின் தங்கும் விடுதியிலேயே தங்கி படித்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று (திங்கள்) மதியம் 1.45 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ராகவ் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஜவஹர் நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வி.வி. சலாபதி கூறுகையில், கடந்த ஞாயிறு இரவு கிரிக்கெட் மேட்ச் பார்த்துவிட்டு ராகவ் தனது விடுதி அறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வெகுநேரம் ஆகியும் ராகவ் தங்கியிருந்த விடுதி அறை திறக்கப்படாததையடுத்து சக மாணவர்கள் கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது, அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக கிடந்த ராகவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஜவஹர் நகர் போலீசார் ராகவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பின்னர், ராகவ் தற்கொலை செய்து கொண்டது குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி தேர்வு ஒன்றில் ராகவ் தோல்வியடைந்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், மாணவர் ராகவ் சாந்தாராம் தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாக அறியப்படவில்லை என்றும், தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*