w
Home » தமிழ்நாடு » தாலி கட்டுவதற்கு முன் மணமகன் தற்கொலை மணமகள் கதறல்

தாலி கட்டுவதற்கு முன் மணமகன் தற்கொலை மணமகள் கதறல்

நெல்லை, பிப்.5: தாலி கட்டும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணமகன் தற்கொலை செய்து கொண்டதால், பல்வேறு கனவுகளுடன் காத்திருந்த மணமகள் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள வடக்கு குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்த செல்லத்துரையின் 2-வது மகன் வெங்கடேஷ் (26). பி.காம். பட்டதாரியான இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பி.காம். பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவருக்கும் ஒரே ஊர் என்பதால் திருமண நிகழ்ச்சி களைகட்டி இருந்தது. இவர்களுக்கு நேற்று காலை வள்ளியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. முகூர்த்தம் காலை 9.30 மணிக்கு குறிக்கப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு மணப்பெண் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மாப்பிள்ளையை அழைத்துவர பெண் வீட்டார் புறப்பட்டனர். பெண் வீட்டார் வர இருந்த நிலையில், காலை 8.30 மணிக்கு வீட்டில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த வெங்கடேஷ் தனியாக சென்றார். அப்போது ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால், பதில் எதுவும் வரவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த அறையின் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பதறிப்போன அனைவரும் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

திருமண மண்டபத்தில் கனவுகளுடன் காத்திருந்த மணப்பெண்ணிடம் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்று அனைவரும் தயங்கினர். பின்னர் அவரிடம் மெதுவாக விசயத்தை சொன்னபோது, அவர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். அவரை உறவினர்கள் தேற்றியபடி இருந்தனர். திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் திருமண மண்டபம் களை இழந்தது.

வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் என்றும், வெங்கடேசும் சில நாட்கள் விடுமுறை எடுத்து தனது திருமண அழைப்பிதழை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு கொடுத்துவந்தார் என்றும் தெரிவிக்கும் உறவினர்கள் வெங்கடேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என்றே கூறுகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*