Home » சினிமா » அசத்தல் அஜித்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

அசத்தல் அஜித்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

அல்டிமேட் ஸ்டார் அஜித் திரையில் மட்டும் ஹீரோவாக அல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே ரசிகர்கள் அவர் மேல் அதிக மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட நட்சத்திர கலை விழாக்கள், நட்சத்திர கிரிக்கெட் ஆகியவற்றில் அவர் பங்கேற்றதில்லை.
ரசிகர்களிடம் இருந்து வசூல் செய்வதை அவர் விரும்பாதவர். அரசியல் பற்றி இதுவரை பேசியது கிடையாது. வாங்கும் சம்பளத்தில் இருந்து ரசீதுடன் ஒழுங்காக வருமான வரிகட்டி வருபவர்.

எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் நடிகர் என்ற அந்தஸ்துடன் முதலில் செல்லாமல் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.அதே போல் ஒரு முறை வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் நேரத்தில் அந்த தயாரிப்பாளரால் குறித்த நேரத்தில் பணத்தை அனுப்ப முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி படக்குழுவினர் தவித்தனர். அப்போது அஜித் தான் வைத்திருந்த கிரெடிட் கார்டுகள் மூலம் ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டு விமான டிக்கெட்களுக்கும் தன்சொந்த பணத்தை எடுத்து கொடுத்து அனைவரையும் பத்திரமாக சொந்த நாட்டுக்கு அழைத்து வந்தார். இப்படி நிஜத்திலும் பல முகங்களோடு உள்ள அஜித்தின் எளிமையான குணத்துக்கு இன்னொரு சான்றாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்கள் முதல் உச்ச நடிகர்கள் வரை பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வாங்கி உபயோகப்படுத்தி வரும் நிலையில் நடிகர் அஜித் இது போன்ற சொகுசு கார்களை விரும்பாதவர். தனக்கு பிடித்த மாருதி ஸ்விப்ட் காரை தான் எப்பொழுதும் பயன்படுத்தி வருகிறார்.  படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனது நண்பர்கள் சிலருடன் இரவில் சென்னையை சுற்றிக்கொண்டு காற்று வாங்குவது அவரின் வாடிக்கையாகும். அஜித்தின் வீட்டை கட்டிக் கொடுத்தவரும், நண்பருமான பிரதாப் என்பவருடன் அவரது காரில் சமீபத்தில் இரவில் வெளியில் சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு இருவரும் காரில் பேசிக்கொண்டே புறப்பட்டுள்ளனர். தி.நகரில் சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் 1.30 மணியளவில் கண்ணதாசன் சிலையருகே வந்த போது கார் பெட்ரோல் இல்லாமல் திடீரென நின்று போனது.

உடனே பதறிய பிரதாப் அஜீத்திடம் நீங்கள் டிரைவர் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள். நான் கீழே இறங்கி காரை தள்ளுகிறேன். வாணி மகால் சிக்னல் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது என்றார். ஆனால் அஜித்தோ நீங்கள் இறங்க வேண்டாம். நான் இறங்கி அப்படியே ரிலாக்சாக காரை தள்ளிக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.  நள்ளிரவு வேளையில் உதவிக்கு கூட யாரையும் கூப்பிடாமல் காரை தள்ளியவாறே அஜித் சென்றுள்ளார். பெட்ரோல் பங்குக்குகாரை தள்ளியபடி வந்த அஜித்தை பார்த்ததும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் பேசி கைகுலுக்கி மகிழ்ந்தனர். பின்னர் பெட்ரோல் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அஜித் அருகிலிருந்த டீக்கடையில் காரை நிறுத்தி டீ கேட்டுள்ளார். இரவில் அஜித்தை பார்த்த டீக்கடைக்காரரும் உற்சாகமடைந்து அஜித்துக்கு ஸ்பெஷலாக டீ போட்டு கொடுத்துள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து செல்போனில் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இப்படி எளிமையாக நடந்துகொண்ட அஜித்தை பார்த்து பெட்ரோல் பங்க் ஊழியர்களும், டீக்கடைக்காரரும் வியந்ததாக அஜித் நண்பர் பிரதாப் வேறொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ போல் அடுத்தவர்களுக்கு கஷ்டம் என்றால் உடனே உதவி செய்பவர் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல், அனைவரிடமும் எளிமையாக நடந்துகொள்ளும் அவரது குணத்துக்கு இந்த சம்பவம் மேலும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*