Home » Flash News » நாளை மாலை முழு சந்திர கிரகணம்

நாளை மாலை முழு சந்திர கிரகணம்

சென்னை, ஜன. 30: 150 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடைபெறும் முழுசந்திரகிரகணம் நாளை மாலை 6.30மணியளவில் ஏற்படுகிறது.  சென்னையில் சந்திரகிரகணத்தை பார்ப்பதற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது “புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.

நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.
இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல்படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால் சிவந்த நிலாவாக தோன்றும்.

இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
சூப்பர் மூன்’என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்றும், இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்ணாலேயே இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம்.
இதுகுறித்து பிர்லா கோளரங்கத்தின் துணை இயக்குனர் சவுந்திரபாண்டியன் கூறுகையில்,சந்திரகிரகணத்தின் போது நிலா ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும். புளூமூன் என்பதால் நீலநிறத்தில் காட்சியளிக்கும் என்று எண்ணக்கூடாது. தொலைநோக்கிகள் மூலமும் சாதரணமாகவும் இதை பார்க்கலாம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*