Home » விளையாட்டு » சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி

சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி

மெல்போர்ன், ஜன.28:  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்திய கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதுடன் தரவரிசையிலும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

மெல்போர்னில் நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் நம்பர் 1 வீராங்கனை ஹாலெப்புடன் மோதினார் வோஸ்னியாக்கி. முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. டை பிரேக்கரில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த வோஸ்னியாக்கி 7-6 (7-2) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஹாலெப் 6-3 என கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது.

3வது மற்றும் கடைசி செட்டில் ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த வோஸ்னியாக்கி 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 49 நிமிடம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது அவர் பெற்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் 2வது இடத்தில் இருந்த வோஸ்னியாக்கி, ஆஸி. ஓபனில் பட்டம் வென்றதை அடுத்து முதல் இடத்துக்கு முன்னேறினார்.

அதே சமயம், 3வது முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் தோற்ற ஹாலெப் மிகுந்த ஏமாற்றமடைந்தார். பிரெஞ்ச் ஓபன் தொடரில் 2014 மற்றும் 2017ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர் பட்டம் வெல்லத் தவறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*