Home » Flash News » 1 கோடி உறுப்பினர்கள்: ரஜினி அதிரடி திட்டம்

1 கோடி உறுப்பினர்கள்: ரஜினி அதிரடி திட்டம்

சென்னை, ஜன.27: ரஜினி தொடங்க உள்ள அரசியல் கட்சியில் ஒரு கோடி பேரை இணைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இது வரை 2 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.  சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் எனவும் பரபரப்பாக அறிவித்தார். மேலும் கட்சியின் பெயர், சின்னத்தை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார். 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 2 லட்சம் பெண்கள் உறுப்பினராக இணைந்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக அளவில் கட்சியில் இணைக்க வேண்டும் என்று ரஜினி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இளைஞர்களையும், பெண்களையும் அதிக அளவில் உறுப்பினராக சேர்க்க நிர்வாகிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ள ரஜினி அது பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்து அவர்களை அதிக அளவில் மன்றத்தில் இழுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ரஜினி மக்கள் மன்றத்தில் 5 லட்சம் பெண்கள் உட்பட 1 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து பிற மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகா உள்ளது. இந்நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று மாலை சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஆயிரம் பேர் புதிதாக இணைந்தனர்.

அதேபோல் ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் 1500 பேர் இணைந்தனர். கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏராளமான பெண்களும், இளைஞர்களும் ஆர்வமுடன் மக்கள் மன்றத்தில் இணைந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*