Home » Flash News » ஐபிஎல் ஏலம்: ரூ.12.5 கோடிக்கு பென் ஸ்டோக்ஸ்

ஐபிஎல் ஏலம்: ரூ.12.5 கோடிக்கு பென் ஸ்டோக்ஸ்

பெங்களூரு, ஜன.27: இன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தை  சேர்ந்த இந்திய வீரர் அஷ்வினை ரூ. 7.6 கோடிக்கு கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியது. அதிகபட்சமாக, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.  2018-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு, பெங்களூருவில் இன்று நடைபெற்றது. முதலில் நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இந்தியாவின் அஷ்வின், யுவராஜ், கவுதம் கம்பீர், ஷிகர் தவான், ரகானே, ஹர்பஜன் சிங், ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் கெய்ல், போலார்டு, மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), சாகிப் (வங்கதேசம்), டுபிளசி (தென் ஆப்ரிக்கா), டுவைன் பிராவோ (வெ.இண்டீஸ்), வில்லியம்சன் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் நட்சத்திர அந்தஸ்து பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

முதல் வீரராக இந்திய வீரர் ஷிகர் தவான் ஏலத்துக்கு வந்தார். அவரை பஞ்சாப் அணி, ரூ.5.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால், ஆர்.டி.எம் மூலம் ஹைதராபாத் அவரை மீட்டது. இதையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் அஷ்வின் ஏலத்துக்கு விடப்பட்டார். சென்னை அணி ஏலத்தை தொடங்கிவைக்க பல அணிகள் அஷ்வினை எடுக்க மும்முரம் காட்டியது. குறிப்பாக, பஞ்சாப் அணி அவரை எடுக்க ஆர்வம் காட்டியது. இதையடுத்து அஷ்வினை ரூ.7.60 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. பொல்லார்டு ஏலத்துக்கு வர, டெல்லி அணி அவரை ரூ.5.40 கோடிக்கு வாங்கியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்.டி.எம் மூலம் அவரை மீட்டது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ரூ.2 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்லை ரூ. 9 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. இந்திய வீரர் கவுதம் கம்பீர், ரூ.2.80 கோடிக்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கலக்கல் மன்னன் பிராவோவை பஞ்சாப் அணி ரூ. 6.40 கோடிக்கு ஏலம் எடுக்க அவரை ஆர்.டி.எம் முறையில் சென்னை அணி மீட்டது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஏலத்துக்கு வர, அவரை ஹைதராபாத் அணி 3 கோடிக்கு எடுத்தது. அதிரடி மன்னன் யுவராஜ் சிங் அடுத்ததாக ஏலத்துக்கு வர, அவரை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளூர் டி -20 தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. இதில் மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுடன் இரண்டு ஆண்டு தடையிலிருந்து மீண்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் இணைகின்றன. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இடம் பெறுகின்றனர். எட்டு அணிகளில் இதுவரை 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 182 வீரர்களின் இடங்களுக்கான ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில், 8 அணியால் விடுவிக்கப்பட்ட மற்றும் இதுவரை விளையாடாத வீரர்கள் என மொத்தம் 578 பேர் பங்கேற்கின்றனர். இதில் 361 வீரர்கள் இந்தியாவை  சேர்ந்தவர்கள். ஒவ்வொரு அணியும், தலா ரூ. 80 கோடி வரை வீரர்களை தேர்வு செய்யலாம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*