Home » விளையாட்டு » ஐபிஎல்: அஸ்வினுக்கு கடும் போட்டி

ஐபிஎல்: அஸ்வினுக்கு கடும் போட்டி

பெங்களூர், ஜன. 26: ஐபிஎல் 2018க்கான வீரர்கள் ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூரில் நடக்கிறது. கடும் போட்டிக்கு இடையே சென்னை அணி தமிழக பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு கிரிக்கெட் திருவிழாவாக இந்தியாவில் இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கும். இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரிவில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

281 நட்சத்திர வீரர்கள், 838 பிரபலமல்லாத வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க பெயரைப் பதிவு செய்துள்ளனர். உலகம் முழுதிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் இதில் பங்கேற்க தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதில் 578 வீரர்கள் ஏலத்தில் விடப்பட உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், அஸ்வின், ரகானே போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என தெரிகிறது. குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சர்வதேச வீரர்களைப் பொருத்தவரை கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

சென்னை அணி 2 ஆண்டுகால தடைக்கு பின் களமிறங்குகிறது. இந்த அணி தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்டது. தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வினை தக்கவைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்த நிலையில் அவரை பல அணிகள் வாங்க போட்டி போடுவதாக தெரிகிறது. எனினும் சென்னை அணி அஸ்வினை மீண்டும் ஏலத்தில் எடுக்கும் என தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*