Home » Flash News » உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார்

புதுடெல்லி,ஜன.12: நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இன்று உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முறைப்படி வழக்குகளை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் ஒழுங்குமுறைகளை பின்பற்றி இயங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஜெ. செல்லமேஸ்வரர். டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள இவரது வீட்டில் இவரும், உச்சநீதிமன்றத்தில் பிற மூத்த நீதிபதிகளான ரஞ்சன் கோஹாய், எம்.பி.லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

நீதிபதி செல்லமேஸ்வரர் கூறுகையில், மிகுந்த மனவேதனையுடன் இன்று நாங்கள் உங்களை சந்திக்கிறோம். உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று என்பதை நான் ஒப்பு கொள்கிறேன்.  உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் ஒழுங்காக இல்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். இன்று காலை கூட தலைமை நீதிபதியை நாங்கள் 4 பேரும் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தோம். எங்களது முயற்சி பலன் அளிக்கவில்லை என்பதால் வேறு வழியின்றி இங்கு வந்திருக்கிறோம்.

நான் விசாரித்து கொண்டிருந்த ஒரு வழக்கை தலைமை நீதிபதி வேறு 4 நீதிபதிகளுக்கு மாற்றினார். இந்த விஷயத்தில் தலைமை  நீதிபதியே முழு அதிகாரம் படைத்தவர் என்பதே மற்ற 4 நீதிபதிகளும் ஒப்பு கொண்டனர். அந்த வழக்கு
நீதிமன்றத்தில் நடைபெறுவதாக கூறப்படும் ஊழல் பற்றியது ஆகும்.  லக்னோவில் அரசாங்கத்தால் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அனுமதி அளித்ததில் லஞ்சம் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்தது.  இந்த விஷயத்தில் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்குமாறு நாங்கள் விடுத்த வேண்டுகோளை தலைமை நீதிபதி ஏற்காததால் உங்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது என்றார்.

அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு தலைமை நீதிபதி மீது இம்பீச்மென்ட் கொண்டு வரப்பட வேண்டுமா என கேட்டதற்கு இதை நாடு முடிவு செய்துகொள்ளட்டும் என்றார்.  மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றவும், உச்ச  நீதிமன்றத்தின் மாண்பை பின்பற்றவும் நாங்கள் கடமை பட்டிருக்கிறோம். அதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று 4  நீதிபதிகளும் கூறினர். தங்களது மனக்குறைகள் குறித்து 4 பேரும் ஒரு மாதத்திற்கு முன்பே தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு 7 பக்கங்களில் எழுதிய கடிதத்தையும் இன்று வெளியிட்டனர். இந்த 4 நீதிபதிகளின் கருத்துக்கு மேலும் 2 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் பேட்டியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலையை பரிசீலிப்பதற்காக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆலோசனை நடத்தினார்.
உச்சநீதிமன்றத்திலேயே  நீதிபதிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் பகிரங்கமாகி இருப்பது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி உடனடியாக சட்ட அமைச்சர் ரவிசங்கர், சட்ட இணை அமைச்சர் பி.பி.சௌத்ரி ஆகியோரை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*