Home » Flash News » கோயம்பேட்டில் வெளியூர் பஸ்கள் நிரம்பி வழிந்தன

கோயம்பேட்டில் வெளியூர் பஸ்கள் நிரம்பி வழிந்தன

சென்னை, ஜன.12: கடந்த 8 நாட்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இன்று காலை முதல் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. ஒவ்வொரு பஸ்சிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  சென்னையில் இருந்து புதுச்சேரி, தஞ்சை, திருச்சி செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.  ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த பேருந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு தரப்பில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தினர் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பயணிகள் அவதிப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இது ஊழியர்கள் உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்று 5-ம் தேதியே உத்தரவிடப்பட்ட போதிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை. தங்கள் தரப்பு கோரிக்கையையும் கேட்க வேண்டும் என்று தொழிற்சங்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீடித்தது. இதனிடையே தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத்தொகையில் ரூ.750 கோடி பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என்று கடந்த புதன்கிழமை சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் தொழிற்சங்கங்கள் இதனை ஏற்க மறுத்ததால் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொழிற்சங்கங்கள் தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அரசு அறிவித்த 2.44 காரணியால் பெருக்கும் ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தங்களது கோரிக்கை படி 2.57 காரணி ஊதிய உயர்வை வழங்குவது குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை நடுவராக நியமித்து பேச்சு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அரசு சம்மதித்ததை தொடர்ந்து நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையிலான அமர்வு, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்தது. தொழில் தாவா சட்டவிதிகளின் கீழ் இந்த நடுவர் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து போராட்டத்தை இன்று முதல் வாபஸ் பெறுவதாக நேற்று இரவு சிஐடியூ செயலாளர்  சௌந்தரராஜன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலையிருந்தே வெளியூர் செல்லவேண்டிய பயணிகள் கூட்டம் அலைமோதியது.  பொங்கலையொட்டி சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவுகளும் இன்று நடைபெற்றன. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.  பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சொந்தஊருக்கு செல்ல வேண்டிய பயணிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர். அலுவலகம் செல்வோரும் இன்று வழக்கம் போல் பணியிடங்களுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் இன்று இயல்பு நிலை திரும்பி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*