Home » Flash News » ஜெ. சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தாக்கல்

ஜெ. சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தாக்கல்

சென்னை, ஜன.12 ஜெயலலிதா மரணம் குறித்த  விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இரண்டு பெட்டிகளில் சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அளித்துள்ளது. மேலும் சசிகலாவின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  விசாரணை ஆணையத்தில் இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அண்ணன் தீபக், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ், ஜெயலலிதாவுக்கு ‘எம்பாமிங்’ செய்த சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை தலைவர் சுதா சே‌ஷய்யன், ஜெயலலிதாவின் கைரேகைக்கு  சான்றழித்த டாக்டர் பாலாஜி, தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள்  விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த வாரம் டாக்டர் சத்யபாமா வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அடங்கிய ‘பென் டிரைவ்’வையும் டி.டி.வி. தினகரன் தனது வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமிக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் விசாரணை ஆணையம் முன்பு விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் தனிச் செயலளராக பணியற்றி வந்த ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் திடீரென்று இறந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் இன்று அப்போலோ நிர்வாகத்தினர் 2 பெட்டிகளில்
சிகிச்சை விவரங்கள் ஆவணங்களை அளித்துள்ளனர்.  இதனை முழுமையாக நீதிபதி ஆறுமுகசாமி சோதனை செய்த பிறகு அப்போலோ டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இதுவரை தெரிவித்து வந்துள்ள மாறுபட்ட கருத்துகள் குறித்தும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.  மேலும் இன்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆணையம் முன்பு ஆஜராகி சசிகலா தரப்பு விளக்கங்களையும் அளித்துள்ளார். மேலும் சசிகலா மீது குற்றசாட்டு தெரிவித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*