Home » தமிழ்நாடு » குமரி மாவட்டம் கோவளத்தில் துறைமுகமா? முதல்வர் விளக்கம்

குமரி மாவட்டம் கோவளத்தில் துறைமுகமா? முதல்வர் விளக்கம்

சென்னை,ஜன.11: கன்னியாகுமரி மாவட்டம், கோவளம் அருகே புதிய துறைமுகம் அமைப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்தார். இந்த துறைமுகம் அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அனைத்து தரப்பு மக்களின் குறைகளை கேட்டறிய சிறப்பு பணி அதிகாரியாக விஷ்ணு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் பேசியது வருமாறு:-மத்திய கடல் மற்றும் தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகம் கன்னியாகுமரி மாவட்டம், இனையம் மற்றும் மேல்மிடாலம் மீனவ கிராமங்களுக்கிடையே ரூ.28,000 கோடிசெலவில் வர்த்தக துறைமுகம் ஒன்றை அமைக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இத்திட்டத்திற்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக நிர்வாகத்தை முகமை நிறுவனமாக நியமித்ததோடு, ரயில் இந்தியா டெக்னிக்கல் மற்றும் எக்கனாமிக் சர்வீசஸ் லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் துறைமுக கட்டுமான பணிகளை மேற்கொள்ள இவ்வமைச்சகம் ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், இனையம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமத்தினர் மேற்படி வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டால், தங்களது வாழ்வாதாரமான மீன் பிடி தொழில் பாதிக்கப்படுமென்றும், அப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவை அத்திட்டத்தினால் பாதிப்படையும் என்றும் கூறி துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு இனையம் வர்த்தக துறைமுகம் எதிர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, எதிர்ப்பு தெரிவித்ததோடு, அத்திட்டத்தை கைவிடுமாறு கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஆய்வுப் பணிகளை தடுத்து நிறுத்துதல், கருப்பு கொடியேற்றுதல், மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு வர்த்தக துறைமுகத்தை இனையம் பகுதியில் அமைப்பதற்கு பதிலாக வனத் துறைக்கு சொந்தமான நிலம் அதிகமாக உள்ள கோவளம் பகுதியில் அமைக்க உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை துவக்கியது. அதன் ஒரு பகுதியாக 20.12.2017 அன்று திட்ட அதிகாரிகள் கோவளம் கிராமம் அருகில் பூமி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்த போது உள்ளூர் மீனவர்கள் சுமார் 200 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டப் பணி தொடர்பாக சில அதிகாரிகள் கடலில் நீர் மாதிரிகளை சேகரிக்க சென்ற போதும் மீனவர்கள் அதனை தடுத்தனர். வர்த்தக துறைமுகம் அமைவதற்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்கள் சுமார் 2400 பேர், 31.12.2017 அன்று துறைமுகத்தை அப்பகுதியில் அமைக்கக் கோரி முகிலன் குடியிருப்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாட்டின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு இந்த வர்த்தகத் துறைமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து அதனைக் களைவதற்கும், விஷ்ணு என்ற அதிகாரியை சிறப்புப் பணி அலுவலராக நியமித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் அரசு கனிவுடன் பரிசீலித்து, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தங்கள் வாயிலாக இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*