Home » அரசியல் » ரூ.11 கோடி நிவாரணம்:முதல்வர்

ரூ.11 கோடி நிவாரணம்:முதல்வர்

சென்னை,ஜன.9: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி,நெல்லை, குமரி மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் ரூ.11 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியதாவது:- ஒக்கி புயல் குறித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை விடப்பட்டது.

30.11.2017 அன்று நள்ளிரவு 12 மணியளவில் புயல் உருவாகி விட்டதாக, இந்திய வானிலை மையத்தினால் வெளியிடப்பட்டு, 12.34 மணியளவில் பெறப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில் கண்ட தகவல்களை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கும், மீன் வளத்துறை இயக்குநருக்கும் மின்னஞ்சல், கைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, பொது மக்களுக்கு பார்வைக்காக 30.11.2017 அன்று பிற்பகல்1.04 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகளில் வசித்து வரும் மீனவர்கள் பல நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, பெரும்பாலும் 15 முதல் 45 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். 29.11.2017-க்கு முன்னர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தினால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவது குறித்த தகவல்கள் பெறப்படவில்லை. புயல் சின்னம் உருவான தகவல் 30.11.2017 அன்று தான் பெறப்பட்டது.

29.11.2017 அன்று 12.34 மணியளவில், இந்திய வானிலை மையத்தினால் வழங்கப்பட்ட எச்சரிக்கை செய்தியினை, அன்றே பிற்பகல் 2.30 மணியளவில் மீனவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லவில்லை. அரசால் அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் 1724 தமிழ்நாடு மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.  குமரி மாவட்ட மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஹெலிகாப்டர்கள் இறங்கு தள வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதி, பிரத்யேக கடற்படை நிலையம் ஆகியவற்றை நிறுவிட பிரதமரை நான் கேட்டு கொண்டுள்ளேன்.

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 747 கோடி விடுவிக்க வேண்டும் என்றும். ஆழ்கடலுக்கு சென்று மாயமான கடைசி மீனவரை மீட்கும் வரை தேடும் பணி தொடர வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு 9302 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.  புயல் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாய பயிர்களுக்கு 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரண தொகை வழங்கப்படும். இந்த 3 மாவட்டங்களிலும் தோட்டக்கலை பயிருக்கு 10 கோடியே 20 லட்சம் ரூபாயும், வேளாண் பயிர்களுக்கு 79 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 10 கோடியே 99 லட்சம் ரூபாய் கணக்கிட்டு வழங்கிட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*