Home » Flash News » ‘வேலைக்கு திரும்புக’ சட்டசபையில் முதலமைச்சர் வேண்டுகோள்

‘வேலைக்கு திரும்புக’ சட்டசபையில் முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, ஜன.9: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கை விட்டு உடனடியாக பணிக்கு திரும்பி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் டிடிவி தினகரன் ஆகியோருக்கு பதிலளித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகை யில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவை நிறைவேற்றி தரப்பட்டது. பல கட்டங்களாக அவர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின் போது 9150 கோடி ரூபாய் நிலுவைத்தொகையாக பாக்கி வைத்துசென்றுவிட்டார்கள். இருந்த போதிலும் அதிமுக அரசு பொறுப்பேற்று தொழிலாளர்களுக்கு பல கட்டமாக நிதிகளை வழங்கி உள்ளது. தற்போது கூட ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது 2.44 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். ஆனால் இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இருந்த போதிலும் தற்காலிக ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அரசின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில் முதல்வர் தலையிட்டு சுமூக தீர்வு காண்பேன் என உறுதியளித்தால் தங்களுடன் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக பல ஆலோசனைகள் நடத்தி அவர்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அந்த வகையில் அரசு அறிவித்துள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை தோல்வி என கம்யூனிஸ்ட் மற்றும் திமுக தொழிற் சங்கங்கள் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பியதன் காரணமாகவே இந்த பிரச்சினை எழுந்துள்ளது என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் பதிலுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என திமுக உறுப்பினர்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தி பேசுகையில், எந்தவித குற்றச்சாட்டையும் துணை முதல்வர் வைக்கவில்லை. நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார் ஆகவே நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: வாட்ஸ்அப் மூலம் வரும் தகவல்களை கொண்டு இங்கு பேச அனுமதியளித்தால் அது சபை குறிப்பில் பதிவாகிவிடும். வாட்ஸ் அப் செய்திகளை கொண்டு பேச அனுமதியளித்தால் நாளை முதல் நாங்களும் பேசுவதை பேரவையில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படி அனுமதி அளிக்கவில்லை என்றால் இன்றைய துணை முதல்வரின் பேச்சை நீக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் முதல்வருக்கு ஆர்வம் இல்லையோ என சந்தேகம் எழுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்: பொதுவாக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றால் முன்னறிவிப்பு செய்தே வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் எந்த முன்னறிவிப்பும் இன்றி வேலை நிறுத்தம் செய்ததே காரணமாக அமைந்தது என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:தவறான தகவல் மூலம் எதிர்க்கட்சி தலைவர் இங்கு பதிவு செய்கிறார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் முதலமைச்சருக்கு ஆர்வம் இல்லையா என எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்புகிறார். தொழிற்சங்கங்களுடன் ஒவ்வொரு முறையும் அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது அமைச்சர் என்றுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்ததையில் அரசன் சார்பில் அமைச்சர் அறிவிக்கிறார். அதன் அடிப்படையில் 2.44 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. தற்போது அரசின் நிதிநிலை எப்படி உள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியின் போது கூட 9150 கோடி ரூபாய் பாக்கி வைத்து சென்று விட்டீர்கள். தற்போதைய அரசின் நிதிநிலையை உணர்ந்து கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை போக்குவரத்து தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு உடனடியாக பணிக்கு திரும்பி மக்களின் சிரமத்தை போக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*