Home » தலையங்கம் » நன்கொடைக்கு கடிவாளம்

நன்கொடைக்கு கடிவாளம்

இந்திய ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் பண பலம் மிக்கதாக உள்ளன. இதற்கு காரணம் நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் தனி நபர்களிடம் இருந்து கோடிக்காணக்கான ரூபாயை நன்கொடையாக பெறுவதே ஆகும். ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களை கவருவதற்காக இந்த பணம் வாரி இறைக்கப்படுகிறது. தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்தவுடன் நன்கொடையாளர்கள் தங்களது சாதகமான முடிவுகளை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். எனவே நன்கொடைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

மக்கள் பிரதிநித்துவச் சட்டப்படி ரூ.20 ஆயிரத்துக்கு மேல் தனி நபர்கள் மற்றும் கம்பெனிகளிடம் இருந்து நன்கொடை பெற்றால் அந்த விவரத்தை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த சட்ட விதியை திரித்து ஒவ்வொரு ரூ. 20 ஆயிரம் வீதமாக தனித் தனியாக நன்கொடை பெறுவதாக குறை கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின் போது அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.

இதை நிறைவேற்றும் விதமாக ஜனவரி 2ம் தேதி மக்களவையில உரையாற்றிய ஜெட்லி,அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இனி தேர்தல் பத்திரம் வாயிலாகவே வழங்க வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். இந்த பத்திரங்கள் தேர்தல் சமயத்தில் மாதத்தில் முப்பது நாட்களும், மற்றக் காலங்களில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா பத்து நாட்கள் மட்டுமே ஸ்டேட் வங்கியில் கிடைக்கும். இந்த பத்திரங்களை ரூ. ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 கோடி மதிப்பில் பெற்றுக் கொள்ளலாம். பத்திரத்தில் நன்கொடையாளர்களின் பெயர் இடம் பெறாது. ஆனால் வங்கியில் கேஒய்சி விண்ணப்பத்தில் நன்கொடையாளர் பெயரை குறிப்பிட வேண்டும். வங்கி கணக்கு மூலமே நன்கொடைக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்படும்.

2007 முதல் 2010 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் பிஜேபி அதிகபட்சமாக ரூ.520 கோடியும், காங்கிரஸ் ரூ. 168 கோடியும் நன்கொடை பெற்றதாக அறிவித்தன. தேசிய கட்சிகளைப் பின்பற்றி மாநில கட்சிகளும் நன்கொடைகள் பெறுகின்றன. ஜெட்லி அறிவித்துள்ள ‘தேர்தல் பத்திரம்’ நடைமுறைக்கு வரும் போது நன்கொடைக்கு கடிவாளம் போடப்படும் என நம்பலாம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*