Home » தலையங்கம் » ஏமாற்றும் கும்பல்

ஏமாற்றும் கும்பல்

இந்தியாவில் ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.2001ல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 933 என்ற விகிதத்தில் இருந்த பெண் குழந்தைகள் 2011 கணக்கெடுப்பில் 1000க்கு 918என்ற விகிதத்தில் குறைந்து விட்டனர். இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்( பெட்டி பட்சோ பெட்டி பட்கோ) என்ற திட்டத்தை ரூ.100 கோடி மதிப்பில் கொண்டு வந்தது. 2015 ஜனவரியில் இந்த உன்னத திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களது கல்விக்காகவும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதை தவறாக பயன்படுத்தும் வகையில் எட்டு வயது முதல் 32 வயது வரையிலான பெண்களுக்கு தலா ரூ. 2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பொய் பிரசாரம் செய்யப்பட்டது. இதை பெறுவதற்காக நாடு தழுவிய அளவில் ரூ. 20 முதல் ரூ. 50 விலையில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பெறப்பட்ட 30 லட்சம் விண்ணப்பங்கள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறையிடம் குவிந்துள்ளன. உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், உத்தரகாண்ட் , அரியானாபோன்ற மாநிலங்களில் இந்த மோசடி அதிக அளவில் நடந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகையாக பணம் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்திய பிறகும் அப்பாவி மக்களிடையே இது போன்ற மோசடி நடந்துள்ளது. இந்த கும்பல் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்படுதின்றன. மத்திய அரசின் கள விளம்பரத்துறை இதற்காகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் இந்த துறையின் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு மத்திய அரசின் திட்டங்கள் விளக்கப்படுகின்றன. இருப்பினும் விண்ணப்பபடிவங்களை அச்சிட்டு விலைக்கு விற்று பணம் ஈட்டும் கும்பலை தடுக்க முடியவில்லை. ஆதார் அட்டை புழகக்கத்திற்கு வந்த பிறகு தான் பணம் பறிக்கும் கும்பல் அதிகரிக்கிறது. ஏமாறுபவர்கள் இருப்பதால் தான் ஏமாற்றுகிறார்கள். எனவே மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இன்னும் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*