Home » தலையங்கம் » ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை

ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை

ரெயில் பயணத்தின் போது பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும் வேண்டும் என்பதை விட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம் ஆகும். குறிப்பாக பெண்களுக்கு ஒடும் ரெயிலில் இழைக்கப்படும் குற்றங்கள் முற்றிலுமாக களையப்பட வேண்டும். பெண்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கீடு செய்வதும், பெண்களுக்கென சிறப்பு ரெயில் இயக்கப்படுவதும் வரவேற்கத்தக்கது. பயணத்தின் போது தொல்லை தருவோர் குறித்து புகார் தெரிவிக்க 182 ஹெல்ப் லைன் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெண் காவலர்களும் ஓடும் ரெயிலில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
பெண்களுக்கு சம உரிமை மற்றும் விழிப்புணர்வு காரணமாக பொதுப் பெட்டிகளிலும் பெண்கள் தனியாக பயணிக்கிறார்கள் இவர்களுக்கு பாலியல் தொல்லை தருவது பற்றிய புகார்கள் அதிகரித்து இருப்பது வருந்ததக்கது.

தெற்கு ரெயில்வேயில் குறிப்பாக தமிழ்நாடு,கேரளாவில்2014 முதல் 2016 வரையிலான காலத்தில் 982 பாலியல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேக் காலக் கட்டத்தில் மத்திய ரெயில்வேயில் 128 புகார்கள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘தமிழ்நாடு, கேரளாவில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தங்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகள் பற்றி உடனுக்குடன் புகார் கூறுகிறார்கள். மத்திய ரெயில்வேயில் புகார்கள் குறைந்திருப்பதற்கு காரணம் பாலியல் தொல்லைகள் நடைபெறவில்லை என்பதல்ல. புகார்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதேயாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பெண்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எல்லா வகுப்புகளில் லோயர் பெர்த்தில் பெண்கள், மூத்தக்குடிமக்களுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்த வசதிகள் முக்கியமல்ல. பயணத்தின் போது தொல்லை தருபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். குற்றங்கள் நிகழ்வதை தடுக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், மாம்பாக்கம், கடற்கரை மற்றும் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையங்களில் 306 சிசிடிவி நிறுவியிருப்பதாக ரெயில்வே பெருமிதம் கொள்கிறது. இதே போல் தொலை தூர ரெயில்களிலும் சிசிடிவிக்கள் நிறுவினால் குற்றங்களை எளிதாக தடுக்க முடியும். பெண்கள் எந்தப் பெட்டியில் பயணித்தாலும் பயணம் பாதுகாப்புமிக்கதாக இருக்க வேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*