Home » Flash News » சிக்கலில் நட்சத்திர கலை விழா

சிக்கலில் நட்சத்திர கலை விழா

சென்னை, ஜன.4:இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜாகீர் நாயக்குக்கு அடைக்கலம் கொடுத்தவர் மலேசியாவில் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள நட்சத்திர விழாவை ஏற்பாடு செய்து இருப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டு இருப்பதாகவும் உள்துறை விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நட்சத்திர கலை விழா திட்டமிட்டபடி நடை பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதிதிரட்டும் வகையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நாளை 5-ம் தேதி நட்சத்திர கலைவிழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 6-ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவிற்கான அழைப்பிதழ் ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நட்சத்திர விழாவில கலந்து கொள்வதற்காக இன்றிரவு கோலாலம் பூர் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் கமலஹாசன் நேராக கோலாலம்பூர் வருகிறார். விழா ஏற்பாடுகளை செய்வதற்காக நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நடிகை குஷ்பு, செயற்குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஆகியோர் இன்று புறப்பட்டுச் செல்கிறார்.

இதனிடையே இந்த நட்சத்திர கலை விழாவிற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், ‘மை ஈவன்ட்ஸ்’ என்ற நிறுவனம் இந்த நட்சத்திர கலை விழாவை நடத்துகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஷாகுல் ஹமீது. இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மதகுருமார் ஜாகீர் நாயக்குக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவர் என்று கூறப்படுகிறது.
ஜாகீர் நாயக்குடன் ஷாகுல் ஹமீது இருக்கும் புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஷாகுல் ஹமீது இந்த நட்சத்திர கலை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் இதனை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். இதனிடையே, இந்தியாவால் தேடப் படும் ஜாகீர் நாயக் மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர். எனவே அவருக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மலேசியாவைச் சேர்ந்த இந்து அமைப்பின் தலைவர் வைத்திய மூர்த்தி உள்பட 16 பேர் மலேசிய அரசிடம் மனு அளித்துள்ளனர். ஜாகீர் நாயக் நடத்தும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை கடந்த ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. சட்ட விரோத நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வந்ததாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. மேலும் வெறுப் புணர்வை தூண்டும் வகையில் ஜாகீர் செயல்பட்டு வருவதாகவும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவதாகவும் மத்திய அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் நட்சத்திர கலை விழாவுக்கு முஸ்லிம் அமைப்பு பின்னணியில் வந்துள்ள தகவலை தொடர்ந்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலும் இது குறித்த தகவல்களை மத்திய உள்துறை கேட்டு இருப்பதாக தெரிகிறது. உள்துறை அமைச்சகமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இந்த நட்சத்திர கலை விழாவின் பின்னணியில் பெரும் அளவிலான தொகையை ஹவாலா மூலம் கை மாற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த கலை விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*