Home » Flash News » ரஜினி இயக்கத்தில் சேர ஆர்வம்: 5 மணியில் 50 லட்சம் – பொங்கலில் கட்சி பெயர்

ரஜினி இயக்கத்தில் சேர ஆர்வம்: 5 மணியில் 50 லட்சம் – பொங்கலில் கட்சி பெயர்

சென்னை, ஜன.2: ரசிகர்களையும், கட்சி  சார்பற்றவர்களையும் இணைக்கும் வகையில் ரஜினிகாந்த் நேற்று தொடங்கி வைத்த இணைய தளத்திலும், செயலியிலும் லட்சக் கணக்கானோர் ஆர்வமுடன் இணைந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணைய தளத்தை பயன்படுத்தியதால் மன்ற இணைய தளம் முடங்கியது. இருப்பினும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் புதிய கட்சியின் பெயர்,சின்னம் போன்றவை மகர சங்கராந்தி தினமான பொங்கல் அன்று அறிவிக்கப்படும் என அவரது சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
ரஜினி ரசிகர்களையும், கட்சி சார்பற்றவர்களையும் இணைக்கும் வகையிலும், அவர்களை மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்க்கவும், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தையும், செயலியையும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

மேலும், அவை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை விளக்கும் வகையில் ரஜினி பேசியுள்ளார். ஒரு நிமிடம் 14 விநாடிகள் அவர் பேசும் இந்த விடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்களின் உறுப்பினர்கள், பதிவு செய்யப்படாத மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என எண்ணும் பொதுமக்களை ஒருங்கிணைத்து, ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் நோக்கத்தில் rajinimandram.org என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம்.

அதில், உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்து உறுப்பினராகுங்கள். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு. எனத் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணியளவில் இணைய தளத்தை ரஜினி தொடங்கி வைத்தார். அந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் ரசிகர்களம், பொது மக்களும் ஆர்வமாக இணையத் தொடங்கினர். ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானோர் இணைய தளத்தை பயன்படுத்தியதால் ரஜினி மன்றத்தில் இணைய தள சேவை முடங்கியது.

இருப்பினும் ரசிகர்கள் ஆர்வமாக முயற்சி செய்து தங்களை பதிவு செய்து கொண்டனர். இரவு 9 மணிக்குள் (அதாவது 5 மணி நேரத்தில்) 50 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் உறுப்பினராக இணைந்துள்ளனர்.

தொடர்ந்து போட்டி போட்டு கொண்டு ரசிகர்கள் உறுப்பினராவதால் மன்றத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர் என்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரஜினியின் புதிய கட்சியின் பெயர், சின்னம் ஆகிய விவரங்கள் மகர சங்கராந்தி தினமான பொங்கல் அன்று வெளியாகும் என்று அவர் சகோதரர் சத்ய நாராயண ராவ் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*